உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்துக்கு தடை

Published On 2022-01-11 09:36 GMT   |   Update On 2022-01-11 09:36 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மொய் விருந்து நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி மாதம் நடத்தப்படுவது வழக்கம். கோடிகளை அள்ளிக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி சம்பிரதாய அடிப்படையில் நடத்தப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தால் அனைத்து தொழில்களும் முடங்கியிருந்தன. மேலும் மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்திருந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்து நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இந்த அண்டு ஒரு சில இடங்களில் மொய் விருந்து என்று பெயரிடாமல் பிறந்தநாள் விழா, காதணி விழா என்ற பெயர்களுடன் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது  கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மொய் விருந்து நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்படி மொய் விருந்து நடத்துவதை தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மொய் விருந்து நடத்த திருமண மண்டபங்களுக்கு தடை உள்ளது.
மீறினால் மேற்படி மொய் விருந்து நடத்தும் திருமண மண்டபங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188&ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News