செய்திகள்
ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)

சேலம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் - தமிழக அரசு அரசாணை

Published On 2021-01-13 11:13 GMT   |   Update On 2021-01-13 11:13 GMT
சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருட பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின்போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 6-ம் தேதி வெளியிட்டது. அதன்படி மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், புதுக்கோட்டை திருமயம் அருகே ராயபுரத்திலும், சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டிலும், திருச்சி திருவெற்றியூர் அருகே சூரியலூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு போட்டிகளை ஜனவரி 15-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடு பிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை, மாடுகள் முன்பதிவு, வாடிவாசல் அமைப்பு என அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News