செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் கணொலி காட்சி மூலம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.

முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்க கூடாது: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

Published On 2021-02-21 01:48 GMT   |   Update On 2021-02-21 01:48 GMT
முதலீட்டாளர்களை ஈர்க்க மாநிலங்கள் சலுகைகள் வழங்க கூடாது என்றும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை திறம்பட செய்து கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
மும்பை :

பிரதமர் மோடி தலைமையில் நேற்று கணொலி காட்சி மூலம் நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்துகொண்டார். கூட்டத்தில் முதல் -மந்திரி தாக்கரே பேசியதாவது:-

சில மாநிலங்கள் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க அவர்களுக்கு மின் கட்டணம், நிலத்தின் விலையில் சலுகைகள் வழங்குகின்றன. இதில் பேரம் பேசுதல் நடக்கிறது.

தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். சலுகைகள் வழங்குதல் போன்ற பொருளாதார ரீதியிலானவைகள் இருக்க கூடாது. நிர்வாக திறன் மற்றும் சிறந்த வசதிகளை வழங்குதல் போன்ற ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

முதலீட்டாளர்களை ஈர்க்க பிற நாட்டுடன் தான் நாம் போட்டியிட வேண்டுமே தவிர, மாநிலங்களுக்கு இடையே அல்ல.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் பிரச்சினையில் மத்திய அரசு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News