செய்திகள்
கனிமொழி எம்பி

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- கனிமொழி எம்பி பாய்ச்சல்

Published On 2020-12-03 07:55 GMT   |   Update On 2020-12-03 07:55 GMT
டெல்லியில் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

திருப்பூர்:

தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பரப்புரை பயணத்தை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மேற்கொண்டு வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையில் நேற்று மாலை நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால், நிலங்கள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பு குறைந்து போகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை விட்டு விட்டு நிலத்தின் அடியில் கேபிள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். பல இடங்களில் இதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் இதனை செய்ய வேண்டும். உயர்மின் கோபுரங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்த்துள்ளனர். எதிர்கட்சிகள் எதிர்க்கிறார்கள்.

ஆனால் இதனை ஆதரித்து பேசிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இந்த சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என கூறிக்கொள்கிறார். இது மிகப்பெரிய துரோகம்.

விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள இந்த சட்டங்களை பாராளுமன்றத்தில் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் தி.மு.க. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இன்னும் 5 மாதத்தில் விடியல் பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டெல்லியில் போராடுகிறவர்கள் இடைத்தரகர்கள் மற்றும் எதிர்கட்சியினர் என பா.ஜனதா மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது: இதை விட விவசாயிகளை கொச்சைப்படுத்த முடியாது. விவசாயிகள் அவர்களது வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். போராடுகிற விவசாயிகளை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் ஆகும் “என்றார்.

Tags:    

Similar News