செய்திகள்
பட்டாசு ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் துண்டு துண்டாகி கிடக்கும் காட்சி.

மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி

Published On 2021-11-05 08:54 GMT   |   Update On 2021-11-05 08:54 GMT
மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நாட்டு பட்டாசு வெடித்ததில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன் (வயது 37). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தீபாவளி பண்டிகையின் போது அரியாங்குப்பத்தில் தயாரிக்கப்படும் நாட்டு பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்வது வழக்கம்.

இதற்கிடையே மரக்காணம் அருகே கூனிமேட்டில் மாமனார் வீட்டில் நாட்டு பட்டாசுகளை விற்பதற்காக கொடுத்திருந்தார்.

நேற்று மாலை மாமனார் வீட்டில் தனது மனைவி ரூபணாவை (34) பார்த்து விட்டு கலைநேசன் தனது மகன் பிரதீசுடன் (7) அங்கு விற்பனை செய்யப்படாத மீதி இருந்த பட்டாசுகளை 2 மூட்டைகளில் கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புதுவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

புதுவை எல்லையான முத்தியால்பேட்டையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் கலைநேசன் அவர் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். இதில், கலைநேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் கீழே சாய்ந்தது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கலைநேசன் மற்றும் அவரது மகன் பிரதீஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன.

அந்த பகுதியில் அருகே வந்த வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் பட்டாசு ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பல்வேறு துண்டுகளாக சிதறியது.

இந்த வெடி விபத்து சம்பவம் நடைபெறும் போது அந்த சாலையில் வாகனங்களில் தனித்தனியே வந்த ‌ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் 2 மாநில எல்லைகளில் நடந்ததால் 2 மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் விபத்து நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பார்வையிட்டு வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் விபத்து நடந்த பகுதிக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தார்.

வெடி விபத்தில் பலியாகி சிதறிய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டாசு விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News