செய்திகள்
வெள்ளி நகைகள்

சேலத்தில் 100 டன் வெள்ளி நகைகள் தேக்கம்- 5 ஆயிரம் பட்டறைகள் மூடல்

Published On 2021-05-01 05:06 GMT   |   Update On 2021-05-01 05:06 GMT
பண்டிகை கால ஆர்டர் வந்தபோதும், போக்குவரத்து வசதி போதிய அளவு இல்லாததால் ஆபரணங்களை வினியோகிக்க முடியாத நிலைக்கு பட்டறை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சேலம்:

சேலத்தில் உள்ள 22 ஆயிரம் பட்டறைகளில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் மூலம் வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி ஆகிய ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நகைள் கர்நாடகா, மெல்லடி, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.

கொரோனா 2-ம் அலையால் கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு என்பதால் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ஆபரணங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

இதனால் 2 வாரங்களில் மட்டும் சேலத்தில் 100 டன் வெள்ளி ஆபரணங்கள் தேக்கம் அடைந்துள்ளன. அதே நேரம் தொழிலாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சேலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் மூடப்பட்டு உள்ளன.

14-ந் தேதி ரம்ஜானை தொடர்ந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் பண்டிகைகள் வரும் நிலையில் வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் சேலம் ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

ஆனால் வட மாநிலங்களில் முழு ஊரடங்கால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை. அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஆபரணங்களை கொண்டு சென்றால் 24 மணி நேரத்திற் குள் வெளியேற அரசு மட்டுமின்றி வியாபாரிகளும் தெரிவிப்பதால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இதுதவிர கடந்த மாதம் வரை வெள்ளி கிலோ 73 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 70 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இதனால் இழப்பு ஏற்படும் என்பதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பண்டிகை கால ஆர்டர் வந்தபோதும், போக்குவரத்து வசதி போதிய அளவு இல்லாததால் ஆபரணங்களை வினியோகிக்க முடியாத நிலைக்கு பட்டறை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ளி தொழிலாளர் நலன் கருதி சேலத்தில் இருந்து வெள்ளி ஆபரணங்களை விற்பனைக்கு எடுத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வெள்ளி தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News