செய்திகள்
ஜெயக்குமார்

ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா- ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Published On 2021-11-27 04:09 GMT   |   Update On 2021-11-27 04:09 GMT
ஜெயலலிதா திட்டங்களை மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. சென்னை ராயபுரத்தில் விருப்ப மனு வினியோகத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மனுக்களை அவர் வழங்கினார்.

இதையடுத்து ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விருப்ப மனுக்களை அனைத்து இடங்களிலும் எழுச்சியோடு தொண்டர்கள் வாங்கிச் செல்கிறார்கள். ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்தால் நிச்சயமாக அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் மகத்தான வெற்றியை பெறும். நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை அரங்கேற்றியதால் செயற்கையான வெற்றியை தி.மு.க. பெற்றது. தேர்தல் ஆணையம் நியாயமாக, சுதந்திரமாக, ஜனநாயக ரீதியாக, வெளிப்படை தன்மையோடு நடக்க வேண்டும்.

இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்களை பொறுத்தவரை தேர்தலை முழுமையாக எதிர்கொண்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.

இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு ஆட்சியும் 7 மாதத்திலே மக்களின் வெறுப்பை சம்பாதித்தது கிடையாது. மக்களிடையே தி.மு.க. ஆட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும், வெறுப்பும் எங்களுக்கு வாக்குகளாக மாறும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து 7 மாதம் ஆகிவிட்டது. என்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்கள்? மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டங்கள் எல்லாம் மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News