செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க புதிய ‘பிரசார வியூகம்’

Published On 2021-03-17 06:03 GMT   |   Update On 2021-03-17 06:03 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்கிறார்.
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. முதல் கட்டமாக 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. மீதம் உள்ள வேட்பாளர்கள் யார் என்பதில் இழுபறி நீடித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் நேற்று இரவு வெளியானது.

இதன்படி, ஏற்கனவே குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற பிரின்ஸ், விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ விஜயதாரணி ஆகியோர் மீண்டும் அதே தொகுதி வேட்பாளர்களாகி இருக்கிறார்கள்.

மயிலாடுதுறை வேட்பாளராக எஸ்.ராஜ்குமார், வேளச்சேரி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி. ஆரூனின் மகன் ஹசான் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கு காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பிரசாரத்தில் தி.மு.க.வை போல் அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

எனவே, இந்த முறை காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளிலும் அதிக கவனம்செலுத்தி வருகிறது. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கத்தில் பிரசார வியூகங்களை அமைத்துள்ளது.

தொகுதி வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த தொகுதியிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. மத்திய பா.ஜனதா அரசுகளின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் தயாரித்து வீடு வீடாக வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, தி.மு.க.வின் வாக்குறுதிகள் ஆகியவையும் வீடுவீடாக வினியோகம் செய்யப்படுகிறது.

25 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் பொதுநலன் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதற்காக தேர்தல் கமி‌ஷனரிடம் முறையாக அனுமதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் கிராம மக்கள் வரை பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களில் எவ்வாறு பிரசாரம் செய்ய வேண்டும்? பேச்சாளர்கள் எவ்வாறு பேச வேண்டும்? என்பது பற்றிய விவரங்கள் பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் தலா 2 சிறந்த பேச்சாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் தொகுதி முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்று பேசுகிறார்கள்.

இந்த பேச்சாளர்கள் தமிழக அரசு மத்திய அரசுடன் சேர்ந்து தமிழர்கள் நலனை புறக்கணித்துவிட்டது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக மத்திய அரசு செயல்படுத்திய நீட், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பு போன்றவை குறித்து விளக்கமாக பேச உள்ளார்கள். மத்திய அரசால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடு போன்றவை குறித்தும் பேச உள்ளனர்.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் தொகுதியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும், மக்கள் குறைதவிர்க்க எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் பேச்சாளர்கள் விளக்கி பேச உள்ளார்கள்.

சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ய தனி தொழில்நுட்ப குழு செயல்பட்டு வருகிறது. வேட்பாளர்களும் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்.

கூட்டணி கட்சிகளுடன் காங்கிரசார் இணைந்து வாக்கு சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்கிறார்.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார அட்டவணை தயாரிக்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News