செய்திகள்
ஜோ பைடன்

அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு

Published On 2021-04-10 02:51 GMT   |   Update On 2021-04-10 02:51 GMT
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகின்றன.

கடந்த புதன்கிழமை தெற்கு கரோலினா மாகாணத்தில் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான பிலிப் ஆடம்ஸ் என்பவர் ஒரு டாக்டர், அவரது மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்‌. பின்னர் அவரும் போலீசுக்கு பயந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இருந்த படி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை ஒரு தொற்று நோயாக பரவி வருகிறது. இது சர்வதேச அளவில் அமெரிக்காவை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி வருகிறது. நாட்டில் தினமும் சராசரியாக 106 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார்கள். இந்த தொற்று நோய் நிறுத்தப்பட வேண்டும். எனவேதான் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விதமாக பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.

அதன்படி ‘பேய் துப்பாக்கிகள்' என்று அழைக்கப்படும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க 30 நாட்களுக்குள் ஒரு விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதேபோல் கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க புதிய விதியை உருவாக்க நீதித்துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு கொடி சட்டத்தை உருவாக்க நீதித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மாகாணங்கள் தங்கள் சொந்த சட்டத்தை உருவாக்க வழிவகை செய்யும். இந்த சட்டம் சமூகத்துக்கு ஆபத்து என்று கருதப்படும் மக்களிடம் இருந்து துப்பாக்கிகளை அகற்ற கோர்ட்டுக்கும், சட்ட அமலாக்கத்துக்கும் அங்கீகாரம் அளிக்கும்.

துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கைகள் குறைவு என்பதை அறிவேன். எனினும் இது ஆரம்பம் மட்டுமே. துப்பாக்கி கட்டுப்பாடுகளுக்கான எனது நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

இதனிடையே துப்பாக்கி கட்டுப்பாடுகள் தொடர்பாக ஜோ பைடன் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்த சில மணி நேரத்துக்குள் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள பைரன் நகரில் மர சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்த லாரி வின்ஸ்டன் பொலின் என்ற 27 வயது வாலிபர் திடீரென சக தொழிலாளர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

எனினும் போலீசார் சில மணி நேரத்துக்குள் அந்த வாலிபரை தேடி பிடித்து கைது செய்தனர்.‌
Tags:    

Similar News