செய்திகள்
அமைச்சர் சிவி சண்முகம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்: மொழி பெயர்ப்புக்கு தமிழக அரசு உதவும் - சி.வி.சண்முகம்

Published On 2019-09-03 18:54 GMT   |   Update On 2019-09-03 18:54 GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிட சங்கடங்கள் இருந்தால், மொழி பெயர்ப்புக்கு தமிழக அரசு உதவும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை மூலமாகத்தான் நான் அறிந்துகொண்டேன். அதுபற்றி எனக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

தமிழில் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதில் அவர்களுக்கு சங்கடங்கள் இருந்தாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ தமிழக அரசு சார்பில் மொழி மாற்றத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த விவகாரத்தில் காரணம் அறிந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டும் என்று சட்டசபையில் நான் அறிவித்தேன். அதன் தொடர்ச்சியாக நானே சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து மனுவை கொடுத்தேன். அதனை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். கடந்த மாதம் 28-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. விரைந்து அந்த பணிகளை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொழி மாற்றம் செய்வதற்கான ‘சாப்ட்வேரு’க்கான (மென்பொருள்) பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனை ஆராய்ந்து, தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. அது முடிந்த பின்னர் கண்டிப்பாக தீர்ப்புகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நாங்கள் அனுப்பிவிட்டோம். இது தற்போது கவர்னரிடம் இருக்கிறது. கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அரசை குறைசொல்லவேண்டும் என்பது மட்டும் தான் வேலையாக இருக்கிறது.

என்ன இருக்கிறது? இல்லை? என்பது கூட அவருக்கு தெரியாது. யாராவது எழுதி கொடுப்பதை சொல்வதுதான் அவருடைய வேலை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது ஆக்கப்பூர்வமான ஒரு நல்ல பயணம். இன்றைய சூழ்நிலையில் உள்நாட்டு முதலீடு மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீடும் ஒரு மாநிலத்துக்கு தேவை. இதனால் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு இருக்கிற சாதகமான சூழ்நிலையை எடுத்துச்சொல்லி முதலீடு செய்ய அழைப்பு விடுப்பது இன்றியமையாதது ஆகும். இதனால் தொழில் வளம் பெருகுவதோடு, வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News