செய்திகள்
கருப்பு பூஞ்சை

சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 6 பேர் பலி

Published On 2021-07-11 10:23 GMT   |   Update On 2021-07-11 10:23 GMT
சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 116 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
சேலம்: 

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் திசு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.   இதில் சேலம் அரசு மருத்துவமனையும் ஒன்றாகும்.  

இதனால் சேலம் மண்டலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றை உறுதி செய்ய பலர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அதன்படி, 189 பேருக்கு என்டோஸ்கோபி மூலம் திசு பரிசோதனையும், 137 பேருக்கு சதை பரிசோதனையும்  மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 116 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக  அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டதுடன் விலை உயர்ந்த (ரூ.8ஆயிரம் வரை) ஊசிகள், குளுக்கோஸ் மூலம் செலுத்தப்பட்டது. நாள்தோறும் தலா 4 ஊசிகள் வீதம், தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு அந்த ஊசி நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டன. கருப்பு பூஞ்சை தொற்று மூக்கு வரை இருந்தால், அதனை அகற்றுவது எளிது. அதே சமயம் கண்ணுக்கு செல்லும்போது, கண்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும், மூளை வரை செல்லும்போது உயிரிழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட  103 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறை சார்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நரம்பியல் அறுவை சகிச்சை, கண் மருத்துவத்துறை மற்றும் பல் அறுவை சிகிச்சை துறை சார்பில் கூடுதல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. 

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில், 68 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் 51 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் கொரோனா பாதிப்பு இருந்தபோதே தீவிர கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு கண்கள்  அகற்றப்பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி  டாக்டர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News