செய்திகள்
ரங்கசாமி

சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம்- ரங்கசாமி அறிவிப்பு

Published On 2021-11-17 02:58 GMT   |   Update On 2021-11-17 02:58 GMT
மழை நிவாரணமாக சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த மாத (அக்டோபர்) இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பாகூர், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்குள் தேங்கிய மழை நீர் வடியாததால் சுமார் 1,000 ஹெக்டேருக்கும் மேல் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி விவசாய விளைபொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசு சார்பில் முழுமையான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

மேலும் மழை காரணமாக கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கிடையே மழையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் பெய்த கனமழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைப்புசாரா தொழிலாளர், கட்டுமான தொழிலாளர் அல்லாத சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைவார்கள். அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகைகள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

பேட்டியின்போது சபாநாயகர் செல்வம் உடன் இருந்தார்.
Tags:    

Similar News