செய்திகள்
தடுப்பூசி

மக்கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி-ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

Published On 2021-06-09 09:05 GMT   |   Update On 2021-06-09 09:05 GMT
ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் அளவுக்குத்தான் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பு பணிகளால் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. கிராமப்புறங்களில் மட்டும் சற்று அதிகரித்து  காணப்படுகிறது. அதனை தடுக்க கண்காணிப்பு குழுவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கிராமப்புற ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இதுகுறித்து திருப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கணேசன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளுக்கும் பெருமாநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் மிகமிக குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கான பிரசாரங்களை உள்ளாட்சி அமைப்புகள் செய்ததன் காரணமாக ஊராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், அம்மா மினி கிளினிக்கிற்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கிறார்கள். இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கும் ஊராட்சியின் மக்கள் தொகைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

ஊராட்சியின் மொத்தமக்கள் தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் அளவுக்குத்தான் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பெருமாநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு, எந்த அடிப்படையில் ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது என்ற தகவல் எங்களுக்கு தெரியவில்லை. எந்த தேதியில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்ற தகவலும் முன்கூட்டியே தெரிவிப்பதில்லை.

பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோதும் சரியான பதில் இல்லை. தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News