செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய கணவன்- மனைவி

வெள்ளத்தில் சிக்கிய கணவன்- மனைவி: தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்

Published On 2021-11-20 09:49 GMT   |   Update On 2021-11-20 09:57 GMT
திருவள்ளூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய கணவன்- மனைவியை தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம், குன்னவளம் அடுத்த குப்பத்துப் பாளையத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து வயல்வெளியில் புகுந்து ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிப்பாடியை சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி அமுலு ஆகிய 2 பேரும் விவசாயப் பணிக்காக குப்பத்துப் பாளையம் கிராமத்திற்கு சென்றனர். பணி முடித்த பிறகு வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.

ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கிவிட்டனர். இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குப்பத்து பாளையத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் வெள்ளம் புகுந்தது.

நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர் ஆனால் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் செய்வதறியாது தவித்தனர். பிறகு வயல்வெளி பகுதியிலிருந்த வீட்டின் மீது ஏறி நின்று கொண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவித்த 2 பேரையும் கயிறு மற்றும் லைப் ஜாக்கெட் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

Tags:    

Similar News