சிறப்புக் கட்டுரைகள்
வரைபடம்

வீடும் வாழ்வும்: வீட்டோடு கடை அமைக்கும் முறை- 23

Published On 2022-01-11 10:15 GMT   |   Update On 2022-01-11 10:15 GMT
வடகிழக்கு மூலை வழியாக உங்கள் மனைக்குச் செல்லுவதும், வடகிழக்கு மூலையானது உங்கள் ஆளுமையின் கீழ் அமைகிறபோது, அந்த மனையில், வாழ்பவர்கள் வாழை யடி வாழையாக சுகம் பெறுவார்கள்.


நகர்புறங்களில் விலை அதிகம் கொடுத்து, நல்ல சாலைவசதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மனை வாங்கி வீடு கட்டும் போது அந்த குறிப்பிட்ட இடத்தில் வாடகை வருமானம் வருகிற விதத்தில் சாலையை ஒட்டிக் கடைகளுக்கும் கடைகளுக்குப் பின் பக்கத்தில் வீடும் கட்டி குடியேரும் அமைப்பு சிலருக்கு அமையும்.

இவ்வாறு முன் பாகத்தில் கடைகளும் கடைகளை ஒட்டி சின்ன நடைபாதைவிட்டு பின் பாகத்தில் குடியிருக்க வீட்டை அமைக்கும் போது எந்த பாகத்தில் நடைபாதை அமைய வேண்டும், வீடு எப்படி அமைய வேண்டும் என்ற விதிகளை இங்க காண்போம்.

உங்கள் மனையானது கிழக்கு நோக்கி, அதாவது மனையின் கிழக்கில் சாலை அமைந்து உள்ள மனையில் குறிப்பாக முன் பகுதியில் 40 அடிகள் உள்ளது எனில், 30 அடி அகலத்தைக் கடைக்காக விட்டு, மீதமான 10 அடியை பின்பக்கம் செல்வதற்காக நடைபாதை அமைக்கலாம். எப்போதும் கிழக்கு நோக்கிய மனை என்றாலே வடகிழக்கு பாகத்தில் கிழக்கு பார்த்துதான் வாசல் வைக்க முடியும். இந்த அமைப்புதான் உச்சஸ்தானம் ஆகும்.


 


மேற்கண்ட வரைபடத்தில் காட்டிய படி சாலையை ஒட்டி 1,2,3 என மூன்று கடைகளும் கிழக்கு நோக்கிக் கட்டி வாடகைக்கு விடலாம். வடகிழக்கில் எண்-4 என்ற இடம் தான் நீங்கள் குடியிருக்கும் வீட்டிக்கு செல்ல நுழை வாயிலாக அமைகிறது. எண்-5 என்பது உங்கள் வீட்டுக்கான தலைவாசல் ஆகும். எண்-6 உங்கள் வீடாகும்.

கிழக்கு நோக்கி உள்ள உங்களது மனையை, இப்படியாகப் பிரித்துக்கொண்டால், நிரந்தர வருமானத்துக்கு உண்டான கடைகள் கட்டிக் கொண்டால் உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாய் அருமையாக வாழும் நிலையுண்டாகும்.

உங்களது மனையானது, தெற்கு நோக்கி அமைந்திருக்குமேயானால், மனையின் முன் பாகத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட வேண்டும் என எண்ணமிருக்குமேயானால் கீழ் உள்ள வரைபடத்தைக் காணுங்கள்.

 


உங்கள் மனையின் தெற்குப் பக்கம் சாலையும், சாலைக்கு வடபகுதியில், தெற்கு நோக்கிய அமைப்பின் உங்களது மனையும் உள்ளது. எண்-1,2,3 என்ற பாகங்கள், வாடகைக்கு விடுவதற்கான கடைகளாகவும், எண்-4 என்ற பகுதி, கடைகளுக்கு பின் பாகத்தில் நீங்கள் கட்டிக் கொள்ள உள்ள வீட்டுக்கு செல்ல நடை பாதையாகவும், எண்-5 என்பது, நீங்கள் கட்டிக் கொள்ள உள்ள வீட்டின் தலைவாயிலாகவும், எண்-6 என்பது, உங்கள் வீடாகவும் அமைகிற போது, மிகத்தெளிவான, செழிப்பான வாழ்வு அமையும், குறிப்பாக உங்கள் அடுத்த வாரிசுகளாக வரக் காத்திருக்கும் இளம் பிள்ளைகளுக்கு மிக அழகான ஒரு வாழ்வு கிடைக்கும்.

குணத்தில் மட்டுமின்றி ஒழுக்கச் சம்பந்தமான விசயத்திலும் மேன்மை அடைவார்கள். வீரமான மற்றும் விவேகமான நல்ல வாழ்வு அமையும்.

குறிப்பாக வீட்டில் பெண்கள் நிலை மேன்மையடையும். பெண்கள் பெயரில் தொழில் செய்வது, பெண்களின் மூலமாக சொத்துக் கிடைப்பது போன்ற அம்சங்கள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட, தெற்கு பார்த்த மனையானது பெண்களின் பெயரில் இருக்குமானால், கண்டிப்பாக மேற்கண்டவாறு, மனையை பிரித்து, கடைகளும், வீடும் கட்டிக்கொண்டால், இந்தக் குடும்பம் வாழையடி வாழையாக நீண்ட காலம் இந்தச் சொத்தோடு வாழும் நிலை உண்டாகும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டினாலும், இதுபோல உள்ள இடத்தை மேற்கண்டவாறு பிரித்துக் கொள்வது அதிக முன்னேற்றம் மற்றும் அங்கு வாழுபவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

 


ஆனால் இதற்கு மாறாக உங்களது தெற்கு பார்த்த மனையில், தென்கிழக்கில் நடைபாதை என்பதற்கு பதிலாக தென் மேற்கில் நடைபாதையும்

மீதமான தென் பாகத்தில் கடைகளும் கட்டி தென்மேற்கு நடைபாதை வழியாக, வடபாகத்தில் உள்ள உங்கள் வீட்டுக்கு செல்லும் அமைப்பாகச் செய்து கொண்டால், இது வாஸ்துவின் அடிப்படையில் மிகக் கொடூரமான குறைகளைக் கொடுக்கும்.

அதாவது 1,2,3 என வருவது கடைகளாகவும், 4 என வருவது உங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியாகவும், 5 என்பது உங்கள் வீட்டின் தலைவாயிலாகவும், 6 என்பது வீடாகவும் வரும்படி செய்து கொண்டீர்களாயின் இது முழு அபத்தமாகும்.

இதன் விளைவாக கொடுமையான பலன்களே கிடைக்கும். ஏனெனில் தென்மேற்கில் ஜன்னல் வருவதோ, பால்கனி வருவதோ, தலைவாசல் வருவதோ மிகக் கடுமையான குற்றமாகும்.

இந்த அமைப்பு உடைய வீடுகளில் குறிப்பாக பெண்களின் வாழ்க்கை பெரிய பாதிப்புகள் அடையும்.திருமணம் நின்றுபோவது, வறுமையால் குடும்பம் துவண்டு போவது, ஊனமான பிள்ளைகள் பிறப்பது போன்ற குறைகள் உண்டாகும்.

வேலையில்லா திண்டாட்டம், சட்டத் தொல்லைகளும் இதோடு சேர்ந்து கொண்டு குடும்ப நபர்கள் அசிங்கமான வாழ்வை அடைவார்கள்.

குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்பவர்களும், இதுமாதுரி அமைப்புகளைக் கவனித்து வீடு வாங்குவது நலம் பயக்கும்.

தென்மேற்கு எனும் நிகிருதி மூலையானது, ஒரு வீட்டில் சுகம், போகம், ஆரோக்கியம், காசு, பணம், சொத்து சுகம் என சகல விசயத்தையும் குறிக்கக் கூடியது, கவனம் வேண்டும்.

உங்களது மனையானது ஒருவேளை மேற்கு பார்த்து இருக்குமானால், இந்தக் குறிப்பிட்ட மனையில், முன்பாகத்தில் நிரந்தர வருமானம் கருதி கடைகள் கட்டி வாடகைக்குவிடும்நோக்கில், பின்பகுதியில் தங்களுக்கான சொந்த வீட்டை அமைக்கும் போது மேலே கண்ட வரைபடத்தில் உள்ளதுபோல் அதாவது 1,2,3 என்பது கடைகளாகவும், 4 என வருவது, உங்கள் வீட்டின் தலைவாயிலாகவும், 5 என வருவது உங்களுக்காக நீங்கள் கட்டும் தனி வீடாகவும், 6 என வருவது மேற்கில் உள்ள சாலையில் இருந்து கிழக்கு நோக்கி, வடமேற்கு பாகம் வழியாக உங்கள் வீட்டுக்குச் செல்லும் வழித்தடமாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மேற்கு பார்த்த மனையை இவ்வாறாக அமைக்கும் போது, அந்த வீட்டில் நிரந்தரமான சந்தோ‌ஷம் களைகட்டுவதைப் பார்க்கலாம்.

குறிப்பாக, மேற்கு பார்த்த மனை என்றால் சிறப்பு செய்யாது என்று எண்ணுகிற மனநிலை பலருக்கு உண்டு. இது முற்றிலும் தவறாகும். எந்த பக்கம் பார்த்த மனையானாலும் அந்த மனையின் உச்சஸ்தானம் பாதிக்கப்படாமல், நாம் அந்த மனையைப் பயன்படுத்திக் கொண்டோமேயானால் அது சிறப்புகளைச் செய்யும். கூடவே உங்களது ஜாதகத்தின் அடிப்படையில் சந்திரன் அமைந்துள்ள ராசி எந்தத்திசையைக் குறிக்கின்றதோ, அந்த திசையுடைய மனையையும் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நிச்சயம் தொல்லைகளில் இருந்து விடுபட்டு சுகம் பெறலாம்.

மேற்கு பார்த்த மனையில் நாம் மேலே குறிப்பிட்ட படி மனை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் அந்த வீட்டில் வளரும் பிள்ளைகள் அறிவாளிகளாகவும், மற்றும் வீரியமானவர்களாகவும், போட்டிகளில் வெல்லக் கூடியவர்களாகவும் வருவதைக் காணலாம்.

ஒரு வேளை இதே மேற்கு பார்த்த மனையை தவறுதலாக தென்மேற்கில் நடைபாதை விட்டு, பின் பாகத்தில் வீடு கட்டிக் கொண்டால் இது தவறாகும்.

மேலே உள்ள வரை படத்தில், 1,2,3 என்ற பாகம் கடைகளாகவும், எண்-4 என்ற பகுதியில் நீங்கள் உங்களுக்குக்காக கட்டிக் கொண்ட வீட்டுக்கு உள்ளே செல்ல நடை பாதையாகவும் அமைத்துக் கொள்வது பெரும் தீங்காகும்.

இந்த அமைப்பு கொண்ட கட்டிடங்கள் அனேகமான இடங்களில், வாடகைக்கு உள்ள நபர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே தகராறுகளும், சட்ட வழக்குப் போராட்டங்களும் சொந்த வீட்டில் குடியிருந்தும், நிம்மதியில்லாத பெரும் தொல்லைகளும் உண்டாகும்.

குடும்ப வாரிசுகளும், சொத்துக்காக உடன் பிறப்புகளிடையே, சட்டவழக்குத் துன்பங்களும் உண்டாகும். இது கவனத்தில் கொள்ள வேண்டிய வாஸ்து குறையாகிறது.

இதேபோல, உங்கள் மனையானது வடக்கு நோக்கி இருக்குமானால், தவறுகள் ஏதும் நிகழாமல் சவுகரியமாக உங்கள் மனையின் முன் பகுதி எனும் வட பாகத்தில், வருமானத்துக்காகக் கடைகளும், கடைகளின் பின் பகுதியில் தங்களின் சொந்த வீட்டையும் கட்டிக்கொள்ளலாம்.

என்றுமே, வடக்கு பார்த்த மனையில் வாஸ்து குறைபாடு இல்லாமல் நல்லபடியாக கட்டிடங்கள் அமையும். அதிர்ஷ்டமான மனையெனில் கிழக்கு என்றாலும், அனுபவத்தில் பார்த்தமட்டும் வடக்கு பார்த்த மனை குறைவின்றி வீடுகட்ட பயன்படுகிறது.

வரைபடத்தில் காட்டியுள்ளபடி வடக்குபார்த்த மனையில் எண்-1,2,3 என்ற பாகங்கள் கடைகளாகவும், 4-எண் என்ற பகுதி, கடைகளுக்குப் பின் பாகத்தில் உள்ள உங்கள் மனைக்கு அல்லது உங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியாகவும், எண்-5 என்ற இடம் உங்களின் தனி வீடாகவும், மிகச் சிறப்பாகவும் அமைகிறது.

உங்களின் வடக்கு பார்த்த இந்த மனையை படத்தில் காட்டியபடி பிரித்துக் கொண்டு உபயோகப்படுத்துகிற போது குறிப்பாக, குபேரபலம் பெற்று என்றென்றும், அந்த இடத்தில் வாழுபவர்கள், வறுமை, ஏழ்மை ஏதுமின்றி, மற்றவர்களுக்கும் கொடுத்து உதவும், பொருளாதார அபிவிருத்தி பெற்று மகிழ்வாக வாழுவார்கள்.

இந்த வீட்டில் வாழும் அனைவரும் அவர்களின் வயதுக்கு ஏற்றார்ப்போல, சகல பாக்கியமும் பெற்று மகிழுவார்கள். முப்பெரும் தேவியர்களின் அருளும் முழுமையாகக் கிடைக்கும்.

உங்களின் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் கூட, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெற்று, அவர்களின் குடும்பமும் நல்ல வளர்ச்சி பெறும். உங்களுக்கும், வாடகைக்கு வந்தவர்களுக்கும் நல்ல இணக்கமான உறவு உண்டாகி, சகல விருத்திகளும் உண்டாகும்.

வடகிழக்கு மூலை வழியாக உங்கள் மனைக்குச் செல்லுவதும், வடகிழக்கு மூலையானது உங்கள் ஆளுமையின் கீழ் அமைகிறபோது, அந்த மனையில், வாழ்பவர்கள் வாழை யடி வாழையாக சுகம் பெறுவார்கள்.

இதேபோல உங்களது வடக்கு பார்த்த மனையின் வட மேற்கில் உள்ளே செல்ல நுழைவாயில் அமைத்து வட கிழக்கில் இருந்து, எண் 1,2,3 என்ற பகுதிகள் வாடகைக்கு விடப்படும் கடைகளாகவும், எண்-4 என்ற பகுதி, பின்பாகத்தில் உள்ள உங்களின் வீட்டுக்குச்செல்லும் நுழைவாயிலாகவும் எண்-5 என்ற பகுதி முழுவதும், உங்களின் தனி வீடாக அமைத்துக் கொண்டாலும், பெரிய தவறு இல்லை தான் என்றாலும், நாம் முன்னே சொன்ன வடகிழக்கு நடைபாதை மிகச்சிறப்பு.

இப்படியாக வடமேற்கில் நடைபாதை வைத்து வீட்டைக்கட்டிக் கொண்டால் குறைவற்ற வாழ்வு உண்டுதான். ஆனால், வடகிழக்கு பாகம், உங்களின் பயன் பாட்டில் இல்லாத காரணத்தால், ஒருவேளை இந்தக் கட்டிடத்தைக் கட்டியவர் வாழும் காலம் உள்ளவரை சிறப்பான வாழ்வும், அதன் பின் வாரிசுகளுக்குச் சில பிரச்சினைகள் வரலாம்.

மேலும், வடகிழக்கு மூலையில் எண்-1 என்ற கடையை நடத்துபவர் மூலம் உங்களுக்கு தொல்லைகள் வரலாம்.

இல்லையெனில், பின் வரும் உங்களின் வாரிசுகளுக்கு பிள்ளைச் செல்வம் தடைபடலாம். கொஞ்சம், கொஞ்சமாக கடன்கள், வருமானத்திற்கு மேலான செலவுகள் இப்படியான தொல்லைகள் உண்டாகலாம்.

எனவே, முடிந்த மட்டும் வடகிழக்கு மூலையில், வாசல் வைத்து, உங்களின் மனைக்கு உள்ளே சென்று வரும்படி அமைத்துக் கொள்வது பெரும் சிறப்பு தரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Tags:    

Similar News