உள்ளூர் செய்திகள்
தேர்தல் ஆணையர் பழனி குமார்

மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் இன்று மாலை ஆலோசனை

Published On 2022-01-27 06:13 GMT   |   Update On 2022-01-27 06:13 GMT
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணையர் பழனி குமார் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவுகிற இக்கால கட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக உள்ளது. மருத்துவமனைகளில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவு உள்ளது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் நடைபெறுவதால் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும், மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையர் முடிவு செய்தார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறுகிறது.



தேர்தல் ஆணையர் பழனி குமார் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரங்களையும், தற்போதுள்ள நிலவரங்களையும் கேட்டு அறிகிறார்.

மேலும் கொரோனா தொற்று அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பின்பற்ற வேண்டும். பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதால் அதன் மூலம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் தற்போதைய கொரோனா பாதிப்பு விவரங்களை எடுத்து விளக்குகிறார்கள்.


Tags:    

Similar News