செய்திகள்

சரத்யாதவுக்கு 14 மாநில கட்சி தலைவர்கள் ஆதரவு - நிதிஷ் குமாருக்கு பீகாரில் மட்டுமே செல்வாக்கு

Published On 2017-08-14 04:56 GMT   |   Update On 2017-08-14 04:56 GMT
நிதிஷ்குமாருக்கு பீகாரில் மட்டுமே செல்வாக்கு உள்ளது, ஆனால் சரத்யாதவுக்கு 14 மாநில கட்சி தலைவர்கள் ஆதரவு உள்ளது என்று சரத்யாதவின் முக்கிய ஆதரவாளரான அருண் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

புதுடெல்லி:

பீகாரில் கடந்த சட்ட சபை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின.

நிதிஷ்குமார் முதல்- மந்திரியாகவும், லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் இருந்து வந்தனர்.

இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தார்.

இதை ஐக்கிய ஜனதா தளத்தில் ஒரு பிரிவினர் ஏற்கவில்லை. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதா? என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐக்கிய ஜனதா தளத்தில் தற்போது நிதிஷ் குமார் அகில இந்திய தலைவராக இருக்கிறார். ஆனால், அதற்கு முன்பு அந்த கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் தான் அகில இந்திய தலைவராக இருந்து வந்தார். அவர் நிதிஷ்குமாரின் முடிவை ஏற்க மறுத்து போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இதனால் சரத்யாதவை ஓரம் கட்டும் வகையில் அவருடைய பாராளுமன்ற மேல்-சபை கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் சரத்யாதவ் மேலும் ஆவேசம் அடைந்துள்ளார். கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சரத்யாதவ் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

சரத்யாதவுக்கு பல மாநில தலைவர்களும் ஆதரவாக உள்ளனர். இது சம்பந்தமாக சரத்யாதவின் முக்கிய ஆதரவாளரான அருண் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய அளவிலான கட்சி ஆகும். இதில் நிதிஷ் குமாருக்கு பீகாரில் மட்டுமே ஓரளவு ஆதரவு இருக்கிறது. ஆனால், அகில இந்திய அளவில் அவருக்கு ஆதரவு இல்லை. 14 மாநில தலைவர்கள் சரத்யாதவை ஆதரிக்கிறார்கள்.


அதுபோல் தேசிய அளவிலான நிர்வாகிகள் பலரும் சரத்யாதவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியில் உள்ள 2 மேல்-சபை எம்.பி.க்கள் அலி அன்வர் அன்சாரி, வீரேந்திரகுமார் ஆகியோரும் சரத்யாதவ் பக்கம் உள்ளனர்.

எனவே, கட்சி எங்களிடம் இருக்கிறது. நிதிஷ் குமாருக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சரத்யாதவ் தான் தலைமை ஏற்று நடத்தி வந்தார். நிதிஷ்குமார் இந்த கட்சியில் நிரந்தரமாக இருந்தவர் அல்ல. சமதா கட்சியில் இருந்த அவர், அந்த கட்சியை எங்கள் கட்சியுடன் இணைத்து எங்கள் கட்சிக்கு வந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது சம்பந்தமாக சரத்யாதவ் கூறும்போது, நாங்கள் யாரும் கட்சிய விட்டு வெளியேற மாட்டோம். ஐக்கிய ஜனதா தளம் கட்சி பீகாருக்கு வெளியே இல்லை என்று நிதிஷ்குமாரே கூறி இருக்கிறார்.

எனவே, நிதிஷ்குமார் புதிய கட்சியை தொடங்கி கொள்ளட்டும். ஐக்கிய ஜனதாதளம் தேசிய கட்சி. அந்த கட்சியை கைப்பற்ற நிதிஷ்குமார் நினைக்க கூடாது. எங்கள் அணிதான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் கட்சி என்று கூறினார்.

Tags:    

Similar News