லைஃப்ஸ்டைல்
புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

Published On 2020-11-16 03:49 GMT   |   Update On 2020-11-16 03:49 GMT
வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும்.
மனம் ஒரு கண்ணாடி. கவலை என்பது அதில் படியும் அழுக்கு போன்றது. அந்த அழுக்கினைப் போக்கும் இராஜதிரவமே புன்னகை என்பது. புன்னகை என்பது முகத்திற்கு மட்டுமல்ல. மனதிற்கும் அழகுசேர்க்கிறது.

புன்னகைக்கு மட்டுமே புத்துணர்ச்சி ஊட்டுகிற வல்லமை உண்டென்பது பல்வேறு மனிதர்களின் வரலாறு காட்டும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் ஒரு முறை தனது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதிக்கிடந்தது. நல்ல வேலை இவருக்கு ஏதும் ஆகவில்லை. இவர் வாகனத்திலிருந்து இறங்கி பக்கத்தில் மரத்து நிழலில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டுநரை விட்டு மெக்கானிக்கை அழைத்து வரக் கூறினார். அந்த பக்கம் வந்த ஒருவர் என்ன ஆனது எனக் கேட்க ஒன்றுமில்லை. நீண்ட நேரம் பயணம் செய்ததால் மரத்தில் எனது காரை நிறுத்திவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன் என்றாராம். தனது கார் விபத்துக்குள்ளான இந்த நிலையில் யாராலாவது இப்படி நகைச் சுவையை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா?. அதுதான் கலைவாணர். இந்த மனநிலைதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்பதை, அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

சகுந்தலா என்ற இவரின் திரைப்படத்தைப் பார்த்த திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜா சென்னை வந்து அப்போது ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். கிருஸ்ணன் மற்றும் எ.ஏ. மதுரம் ஆகியோரைச் சந்தித்துப் பாராட்டினாராம். பின்பு அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றாராம்.

எனவே நகைச்சுவை உணர்வு நம்மை உயர்த்துவதோடு, சோகம் நம்மைத் தாக்காமலும் பாதுகாக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்த விலங்கு. சிரிப்பு ஒரு மனிதனுக்கு நல்ல அறிமுகத்தைத் தருகிறது என்பதை உணர்ந்தோர் அறிகின்றனர். நகைச்சுவை உணர்வு என்பது துன்பத்தின் சுமையை எளிதாக்குகிறது. பரபரப்பான வாழ்க்கையை பரவசப்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் சோகங்களிலிருந்து மீட்டெடுக்கிறது. ஆகவே இடுக்கண் வரும்போதும் நகுவோம். இல்லறம் சிறக்க சிரித்து மகிழ்வோம்.

எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன் என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளது எண்ணிப்பார்க்கத் தக்கது. நாம் சிரித்து வாழவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் பிறரைத்தாக்கி, கிண்டலடித்து மகிழக் கூடாது. அது தமிழர் வழியுமல்ல. நாகரிகமும் அல்ல. ”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என வள்ளுவம் கூறுவதை மனதில் ஆழப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும். இதனை இன்றைய நமது கலாச்சாரத் தேவை என்றே கூறலாம்.

நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் போது, நமது உடலில் 86 தசைகள் இயங்குகின்றன. குறிப்பாக மூளைக்குத் தகவல் அனுப்பும் நரம்புகள் நன்கு இயங்குவதோடு, பெப்டைன் என்ற ஒரு வித கார்மோன் சுரந்து இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகிறது. இதனால் உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது. உற்சாகம் ஊற்றெடுக்கிறது. இதனால் மனம் அமைதி அடைகிறது.

வாய்விட்டுச் சிரிக்கும் போது, உடலின் உள் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. சிரிப்பினை உள் உறுப்புகளுக்கான உடற்பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது. எனவேதான் நம் முன்னோர்கள் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றார்கள். சென்னை போன்ற பெரும் நகரங்களில் சிரிப்புக் கழகங்கள் உருவாக்கப்பட்டு, சிரிப்பூட்டும் தெரபி முறையைப் பின்பற்றுகின்றனர். சிரிப்பு ஒரு மருத்துவ முறை என்பதை நவீன அறிவியல் உலகம் பல முறைகளில் நிரூபித்துள்ளது.

வாழ்க்கை இருட்டிலேயே கிடக்கிறது.

சிரிக்கும்போது மட்டுமே

வெளிச்சமடைகிறது’

என்ற புதுக்கவிதையின் உட்பொருள் ஆழமானது.

நாம் கோபப்படும்போது, உடலில் 32 தசைகள் மட்டுமே இயங்கும். அதுவும் இத் தசைகளின் இயக்கத்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் இருக்கமான நிலையில் உடல் தசைகள் இயங்கும். ஆகையால் இதயத்திற்குச் செல்லும் ரத்தமும் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தமும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஆகவேதான் அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் சில வரையறைகள் உள்ளன. நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்க வேண்டும். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு, ஒருவன் மகிழ்ச்சி அடைவானேயானால், அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக் கொடுமையானது. பிறரை மகிழவைத்து மகிழ்வதே, மகிழ்ச்சியில் உயர்வானது. விக்ரம் சாராபாய் பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் ஒரு விளையாட்டு விளையாடுவாராம். பொதுவாக குழந்தைகள் வகுப்பில் நண்பர்களின் பொருட்களை எடுத்து வேறு இடத்தில் ஒளிய வைத்துவிட்டு, தேட வைப்பார்கள். தேடிக் கிடைக்கவில்லை என்றால், கடைசியில் எடுத்துக் கொடுத்து மகிழ்வார்கள். இது ஒரு வகுப்பறை விளையாட்டு. ஆனால் விக்ரம் சாராபாய் திடீரென்று சாக்லேட்டுகளை வாங்கி வந்து யாரும் அறியா வண்ணம், அனைத்து மாணவர்களின் பைகளிலும் வைத்துவிடுவாராம். நண்பர்கள் பையினை திறக்கும் போது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவார்கள். அந்த இன்ப அதிர்ச்சியைக் கண்டு மகிழ்வாராம் விக்ரம் சாராபாய்.

நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமோ, அதைப்போல நமக்கும் உண்மையான மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். சிலர் எதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பதே தெரியாமல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியல்ல. மகிழ்ச்சிக்கு அர்த்தம் இருக்க வேண்டும்.

முல்லா ஒரு குடிகாரர். தினமும் குடிப்பார். ஆனால் ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் இனி குடிக்கக் கூடாது எனக் கருதுவார். குடிக்கக் கூடாது என நினைப்பார். கள்ளுகடை வாசல்வரை மட்டுமே அந்த மனஉறுதி நிற்கும். கள்ளுக்கடையைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் உள்ளே நுழைந்து விடுவார். ஒருமுறை மனக் கட்டுப்பாட்டோடு கள்ளுக்கடையைக் கடந்து சென்று விட்டார். அவரின் மனஉறுதியை அவராலேயே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டாமா? கள்ளுக்கடைக்குள் நுழைந்தார். மகிழ்ச்சியை முறையாகக் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சி, வாழ்க்கையை எந்த வகையிலும் மேம்படுத்தாது. எனவே மகிழ்ச்சியும் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
Tags:    

Similar News