செய்திகள்
கனகராஜ்

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: ஜெயலலிதா கார் டிரைவர் மரணத்தில் மறு விசாரணை தீவிரம்

Published On 2021-10-22 08:48 GMT   |   Update On 2021-10-22 11:17 GMT
விசாரணை முடிவில் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? இல்லை திட்டமிட்டு அவரை கொலை செய்தார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் கொள்ளை நடந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 27-ம் தேதி இரவு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். கொடநாடு வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான் தனது மனைவி மகளுடன் கேரளாவுக்கு காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தில் மனைவி மகள் உயிரிழந்தனர். தொடர்ந்து சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் தனது தம்பி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார். கனகராஜின் மனைவி கலைவாணியும் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கனராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கனகராஜ் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக ஆத்தூர் டி.எஸ்.பி. ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதற்கிடையில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் நேற்று சேலம் வந்தார். சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் அதிகாரிகளுன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். டி.ஐ.ஜி. மகேஸ்வரி சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி ஜித்தின் ஜாயிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜித்தின் ஜாய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாளை ஊட்டியில் உள்ள பழைய டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் இன்று விசாரணையை தொடங்கினார்.

ஆத்தூர் டி.எஸ்.பி.ராமசந்திரன், கனகராஜ் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், சம்பவத்தன்று கனகராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இவற்றை டி.எஸ்.பி. ராமசந்திரன் பார்வையிட்டார். மோட்டார் சைக்கிள் உடைந்த பகுதி மற்றும் காரின் முன்பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் விபத்து நடந்த அன்று கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் யார்? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பற்றியும், அவர்கள் தற்போது எந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

கனகராஜியின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த அவரது மனைவி கலைவாணி, சகோதரர் தனபால் உள்ளிட்டோரும் விசாரிக்கப்பட உள்ளனர். இந்த கூடுதல் விசாரணை நடத்துவதன் மூலம் கனகராஜ் விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவரும்.

இது குறித்து கனகராஜின் அண்ணன் தனபால் கூறியதாவது:-

எனது தம்பி கனகராஜ் மரணம் விபத்து இல்லை. திட்டமிட்ட கொலை என்று நான் சொன்னேன். அப்போது அ.தி.மு.க. அரசு முறையான விசாரணை நடத்தவில்லை.



இப்போது அரசு மாறி இருக்கிறது. இப்போது உள்ள அரசு முறையாக விசாரித்து, கனகராஜ் சாவில் யார் யாருக்கு தொடர்பு என்பது குறித்து வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. அன்றைக்கும் இந்த கோரிக்கை தான் சொன்னேன். இப்போதும் அதே கோரிக்கையை தான் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்த விவகாரத்தின் பின்னணியில் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கும் கனகராஜின் மரணத்தில் முக்கிய பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நபர்களே திட்டமிட்டு அவரை கொலை செய்து விட்டு அதனை விபத்து போல மாற்றி விட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் அப்போது வெளியானது. ஆனால் போலீசார் கனகராஜ் விபத்தில் சிக்கியே உயிரிழந்ததாக வழக்கை முடித்து விட்டனர்.

விபத்தில் மரணம் அடைந்த போது கனகராஜ் மது அருந்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது. அது தொடர்பாகவும் விபத்து குறித்தும் புதிதாக மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின்போது கனகராஜின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த விசாரணை முடிவில் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? இல்லை திட்டமிட்டு அவரை கொலை செய்தார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


Tags:    

Similar News