இந்தியா
பிரதமர் மோடி

வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை மக்கள் குறைக்க வேண்டும்- பிரதமர் மோடி

Published On 2022-05-06 08:07 GMT   |   Update On 2022-05-06 08:07 GMT
ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் மீதான உலகின் நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். இதை நான் சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது உணர்ந்தேன் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி இன்று ஜெயின் சர்வதேச வணிக அமைப்பின் மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நாம் வெளிநாட்டு பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமை தனத்தை குறைக்க வேண்டும்.

ஏற்றுமதிக்கான புதிய வழிகளை கண்டறிய வேண்டும். இதை பற்றி உள்ளூர் சந்தைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்.


திறமை, வர்த்தகம், தொழில்நுட்பத்தை இன்று நாடு முடிந்தவரை ஊக்குவிக்கிறது. தன்னிறைவு கொண்ட இந்தியாவே நமது பாதை நமது உறுதியாக இருக்க வேண்டும்.

அரசுக்கு மக்களின் ஆதரவும், முயற்சி செய்யும் மன உறுதியும் இருக்கும்போது மாற்றம் தவிர்க்க முடியாதது. இளைஞர்கள், தொழில்முனைவோர், இயற்கை விவசாயம், உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம், சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

40 லட்சம் விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ள அரசின் இ-மார்க்கெட் பிளஸ் போர்ட்டலை நீங்கள் பார்க்க வேண்டும். அதில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த புதிய முறையை மக்கள் நம்புகிறார்கள்.

தொலை தூர கிராமங்களை சேர்ந்தவர்கள், சிறு கடைக்காரர்கள், சுய உதவி குழுக்கள் தங்கள் பொருட்களை நேரடியாக அரசுக்கு விற்கலாம். அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் மீதான உலகின் நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். இதை நான் சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது உணர்ந்தேன்.

உலக அமைதி, செழிப்பு, உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகள் உலகளாவிய விநியோக சங்கிலியை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் முயற்சிகளை உலகம் ஏற்று கொண்டுள்ளது. புதிய இந்தியாவின் விடியல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News