ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டபோது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

Published On 2020-09-29 06:37 GMT   |   Update On 2020-09-29 06:37 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மைய பகுதியில் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய விழாவாகும். இவ்விழாவின் 10-ம் நாள் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 29-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கியது. கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பந்தக்காலுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிச்சகர் பந்தக்காலை கோவில் ராஜகோபுரம் வரை சுமந்து வந்தார். தொடர்ந்து விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் 5 தேர்களுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

பின்னர் காலை 6.30 மணிக்கு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசையும் பந்தக்காலிற்கு தீபாராதனை காணப்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர், உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, நகர்புற வங்கித் தலைவர் குணசேகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ரமேஷ், குமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News