செய்திகள்
பேட் கம்மின்ஸ்

இந்திய அணியின் எழுச்சியில் ஆச்சரியமில்லை - ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ்

Published On 2020-12-31 06:26 GMT   |   Update On 2020-12-31 06:26 GMT
இந்திய அணியின் எழுச்சியில் ஆச்சரியமில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான பேட் கம்மின்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்த ஒரு அணியும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் போது, அடுத்த போட்டியில் கொஞ்சம் கடினமாகவே மீண்டெழுவார்கள் என்பது தெரியும். எனவே இந்திய அணி சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்து மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதில் உண்மையில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

இந்த தொடரில் நான் இந்திய வீரர் புஜாராவை 3 முறை வீழ்த்தியிருக்கிறேன். அவருக்கு என்று நான் பிரத்யேக திட்டம் வகுத்து பந்து வீசவில்லை. பந்தை துல்லியமாக வீச முயற்சிக்கிறேன் அவ்வளவு தான். பந்தை அடிப்பதா அல்லது விடுவதா? என்பது அவரது முடிவை பொறுத்தது. என்னுடைய பணி, முடிந்தவரை சிறப்பாக பந்து வீசுவது. அதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் இதுவரை அவரது இன்னிங்சை சீக்கிரமாக முடித்து வைத்திருக்கிறேன்.

ஸ்டீவன் சுமித் முதல் இரு டெஸ்டில் ரன் குவிக்காதது குறித்து கேட்கிறீர்கள். இதனால் அவருக்கு எந்த நெருக்கடியும் இருக்காது. அவர் ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன். ஒவ்வொரு வீரர்களுக்கும் இது போல் ஏற்றம், இறக்கம் இருக்கத் தான் செய்யும். நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் அசத்துவார். மேலும் டேவிட் வார்னரின் வருகை அணிக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக இருக்கும்.

சிட்னியில் மீண்டும் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நாங்கள் சிறந்த சாதனைகளை வைத்துள்ளோம். கிட்டத்தட்ட மெல்போர்ன் ஆடுகளம் போன்று தான் இருக்கும். பொதுவாக இங்குள்ள ஆடுகளம் வறண்டும், வேகம் குறைந்தும் காணப்படும். நாதன் லயன் பந்தை நன்கு சுழலச் செய்வார். அனேகமாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் தான் இறங்குவோம் என்று நினைக்கிறேன். எங்களிடம் லபுஸ்சேன் இருக்கிறார். அவர் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவர்.

இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.
Tags:    

Similar News