செய்திகள்
ஜெயக்குமார்

சசிகலா அரசியல் செய்வதற்காக எதை எதையோ கூறுகிறார்- ஜெயக்குமார் பேட்டி

Published On 2021-10-11 08:37 GMT   |   Update On 2021-10-11 08:37 GMT
அ.தி.மு.க. 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்று இமயமலைபோல் உயர்ந்து இருக்கிறது. அதை பரங்கிமலைபோல் தாழ்ந்து இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு இணையாக பேசுவது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச் சுவையாகும்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் தனக்கு பிறகும் பல ஆயிரம் ஆண்டுகள் தழைத்து ஓங்கும் என்று அவர் தெரிவித்தார். அவரது காலத்துக்கு பிறகு ஜெயலலிதா இயக்கத்தை எக்கு கோட்டையாக கட்டி காப்பாற்றினார்.

அவரும் தனக்கு பிறகும் கோடிக்கணக்கான தொண்டர்களால் இயக்கம் நிலைத்து நிற்கும் என்று கூறினார். எந்த இயக்கத்திற்கும் இல்லாத சிறப்பு அ.தி.மு.க.வுக்கு உண்டு. கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. 5 முதல்-அமைச்சர்களை தந்துள்ளது.

வருகிற ஆண்டு பொன் விழா ஆண்டாகும். வெள்ளி விழா ஆண்டை ஜெயலலிதா மாநாடுபோல் நெல்லையில் நடத்தினார். அதேபோல பொன்விழா ஆண்டையும் சிறப்பாக கொண்டாட இன்று நடைபெற்ற கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் விழா தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.


புதிய அவைத்தலைவர் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டது. உரிய நேரத்தில் அவைத்தலைவரை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.

சசிகலா வருகையால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வருகிற 16-ந்தேதி ஜெயலலிதா சமாதிக்கு அவர் செல்வதாக கூறியுள்ளார். சிறையில் இருந்து வந்த பிறகு இதுவரை ஏன் செல்லவில்லை. இப்போது அரசியல் செய்வதற்காக ஏதேதோ செய்கிறார், சொல்கிறார்.

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கும் போக மாட்டார்கள். நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சீமான் கூறியதை கேட்கிறீர்கள். அ.தி.மு.க. 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்று இமயமலைபோல் உயர்ந்து இருக்கிறது. அதை பரங்கிமலைபோல் தாழ்ந்து இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு இணையாக பேசுவது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச் சுவையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் 2-வது நாளாக கொரோனா உயிரிழப்பு இல்லை

Tags:    

Similar News