செய்திகள்
ஜிஎஸ்டி

கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு ரூ.49 ஆயிரம் கோடி

Published On 2021-08-04 04:12 GMT   |   Update On 2021-08-04 04:12 GMT
நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட இணையதள குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2019-2020 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு தொடர்பான 10 ஆயிரத்து 657 குற்றங்கள் நடந்தன. ரூ.40 ஆயிரத்து 835 கோடியே 27 லட்சம் வரிஏய்ப்பு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த நிதியாண்டில் (2020-2021) வரிஏய்ப்பு குற்றங்கள் 12 ஆயிரத்து 596 ஆக அதிகரித்தன. அதுபோல், வரிஏய்ப்பு செய்யப்பட்ட தொகையும் ரூ.49 ஆயிரத்து 383 கோடியே 96 லட்சமாக உயர்ந்தது.

அதே சமயத்தில், வரிஏய்ப்பில் ஈடுபட்டவர்களிடம் மீட்கப்பட்ட தொகை குறைவாகவே உள்ளது. கடந்த 2019-2020 நிதியாண்டில் ரூ.18 ஆயிரத்து 464 கோடியே 7 லட்சம் மீட்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் ரூ.12 ஆயிரத்து 235 கோடி மட்டுமே மீட்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 1,580 ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு குற்றங்கள் நடந்துள்ளன. ரூ.7 ஆயிரத்து 421 கோடியே 27 லட்சம் வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

நாடு முழுவதும், அரசியல் காரணங்களுக்காக, கடந்த 2017-ம் ஆண்டு 99 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு 59 பேரும், 2019-ம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளும் சேர்த்து, ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகபட்சமாக 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 24 பேரும், கேரளா, மகாராஷ்டிரத்தில் தலா 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட இணையதள குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 46 சம்பவங்கள், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை ஆகும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்கனவே கையெழுத்தான அனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக அமல்படுத்துவது என்று இரு நாடுகளும் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டன. அதன்பிறகு, போர்நிறுத்த மீறல் சம்பவங்கள் கணிசமாக குறைந்து விட்டன. வெறும் 6 நிகழ்வுகள்தான் நடந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

Similar News