உள்ளூர் செய்திகள்
கோவில்

கடலூர் மாவட்டத்தில் 1640 கோவில்கள் திறப்பு

Published On 2022-01-28 10:47 GMT   |   Update On 2022-01-28 10:47 GMT
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
கடலூர்:

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான், கொரோனா தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களை திறக்கக் கூடாது. பஸ், தியேட்டர், ஓட்டல், நகைக்கடை துணிக்கடை உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மேலும் தினந்தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்தது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1640 கோவில்களும் கடந்த 7- ந்தேதி முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும். மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களில் இன்று முதல் கோவில்கள் தடை உத்தரவுக்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், பெண்ணாடம், பிரளயகாலேஸ்வரர், சிதம்பரம் தில்லைக்காளியம்மன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் என மாவட்டம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 1640 கோவில்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News