செய்திகள்
மும்பையில் நடந்த பொதுத்துறை வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட காட்சி.

நாட்டின் வளங்களை விற்று காங்கிரஸ் லஞ்சம் வாங்கியது: நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

Published On 2021-08-26 02:06 GMT   |   Update On 2021-08-26 10:06 GMT
காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் பணமாக்குதல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையை பணமாக்குதல் திட்டத்தில் விட்டதன் மூலம் காங்கிரஸ் அரசுகள் ரூ.8 ஆயிரம் கோடி சம்பாதித்தன.
மும்பை :

நாட்டின் பொது சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அச்சொத்துகளை பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 25 விமான நிலையங்கள், 40 ரெயில் நிலையங்கள், 15 ரெயில்வே ஸ்டேடியங்கள் ஆகியவற்றில் தனியார் முதலீடு செய்ய இத்திட்டம் வழிவகுக்கிறது.

ஆனால், இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘70 ஆண்டுகளாக மக்களின் பணத்தால் கட்டி எழுப்பப்பட்ட சொத்துகளை தனது பணக்கார நண்பர்களுக்கு பிரதமர் விற்க இத்திட்டம் வழி வகுக்கிறது’’ என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்தநிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று மும்பைக்கு சென்றார். அங்கு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். வங்கிகளின் நிதி செயல்பாடுகள், கடன் வழங்கும் நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் விவாதித்தார்.

பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

பணமாக்குதல் திட்டம் பற்றி ராகுல் காந்தி சரியாக புரிந்து வைத்துள்ளாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த திட்டம், சொத்துகளை விற்பது அல்ல. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மத்திய அரசிடமே சொத்துகள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

குறைவான பயன்பாட்டில் உள்ள சொத்துகளை பணமாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் சிறப்பான பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் பணமாக்குதல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையை பணமாக்குதல் திட்டத்தில் விட்டதன் மூலம் காங்கிரஸ் அரசுகள் ரூ.8 ஆயிரம் கோடி சம்பாதித்தன.



அதுபோல், கடந்த 2008-ம் ஆண்டு, புதுடெல்லி ரெயில் நிலையத்தை குத்தகை எடுப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விண்ணப்பம் கோரியது. அதற்காக அந்த ரெயில் நிலையம் விற்கப்பட்டு விட்டதா? அவரது மைத்துனர் கைக்கு போய்விட்டதா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த ஒரு அவசர சட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லாததால், அதை ராகுல்காந்தி கிழித்துப் போட்டார்.

அதேபோல், உண்மையிலேயே அவர் பணமாக்குதல் திட்டத்துக்கு எதிரானவராக இருந்தால், டெல்லி ரெயில் நிலைய குத்தகை முடிவையும் கிழித்து போட்டிருக்க வேண்டியதுதானே?

நாட்டின் வளங்களை விற்று லஞ்சம் வாங்கியது, காங்கிரஸ் கட்சி. காமன்வெல்த் போட்டிகளில் என்ன நடந்தது? ஒரே ஒரு காமன்வெல்த் போட்டி நடத்தி, தனது பணக்கார நண்பர்கள் சம்பாதிக்க வழி செய்தனர்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பொதுத்துறை வங்கிகள், அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்றுமதியாளர்களின் தேவைகளை புரிந்துகொண்டு உரிய நேரத்தில் தீர்வு காண்பதற்காக, ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் தொழில் வர்த்தக கூட்டமைப்புகளுடன் வங்கிகள் ஆலோசனை நடத்த வேண்டும்.

ஏற்றுமதியாளர்கள், சிறப்பான சலுகைகளை தேடி ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு செல்ல வேண்டியதை தவிர்க்கும்வகையில், பொதுத்துறை வங்கிகள் எளிமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News