செய்திகள்
நோயாளி ஒருவரை மீட்டு கொண்டு வந்த ஊழியர்கள்.

குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Published On 2021-05-01 05:37 GMT   |   Update On 2021-05-01 06:12 GMT
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா பலி உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் தீயில் சிக்கி கொரோனா நோயாளிகள் பலியாகி இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ளது பாரூச் நகரம். இங்கு தனியார் அறக்கட்டளை மூலம் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆஸ்பத்திரி 4 மாடி கட்டிடத்தில் அமைந்து இருந்தது. அதில் கொரோனா சிகிச்சை வார்டில் இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

இதில் கொரோனா நோயாளிகள் சிக்கி கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் பல நோயாளிகள் எழுந்து இருக்கக்கூட முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர்.


அவர்களால் அங்கிருந்து ஓடமுடியவில்லை. அதற்குள் வார்டு முழுவதும் தீ பரவியது. எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக இருந்தது. ஆஸ்பத்திரி ஊழியர்களும், பக்கத்து பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

தீக்குள் சிக்கி இருந்த நோயாளிகளையும் காப்பாற்ற முயன்றனர். அவர்கள் முயற்சியால் பல நோயாளிகள் காப்பாற்ற பட்டனர். சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அவர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.

ஆனால் தீயில் கருகி 12 நோயாளிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுக்கையிலும், ஸ்டிரெச்சர்களிலும் படுத்து இருந்தபடியே கருகி கிடந்தனர்.

காயம் அடைந்த பலரை பக்கத்தில் உள்ள வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேலும் பலர் உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பத்திரமாக மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா பலி உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் தீயில் சிக்கி கொரோனா நோயாளிகள் பலியாகி இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக ஆஸ்பத்திரிகளில் விபத்து ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. கடந்த 26-ந்தேதி மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஆஸ்பத்திரியில் நடந்த தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள்.

அதற்கு 5 நாட்களுக்கு முன்பாக பால்கார் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

அடுத்து நாசிக் நகரில் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கசிந்து 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டில் ஜனவரி மாதம் பாந்த்ரா மாவட்டத்தில் ஆஸ்பத்திரியில் நடந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் வடமாநில ஆஸ்பத்திரிகளில் அதிகளவு நடக்கின்றன.

இன்றைய தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் முதல்- மந்திரி விஜய் ரூபாணி அறிவித்துள்ளார். பல்வேறு தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News