செய்திகள்
கோப்புபடம்

மண்புழு வளர்ப்பு-விவசாயிகளுக்கு மானியம்

Published On 2021-07-20 10:00 GMT   |   Update On 2021-07-20 10:00 GMT
விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் வளரும் தன்மையுடைய மண்புழு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
உடுமலை:

விவசாய சாகுபடிக்கு உறுதுணையாக இருக்கும் மண் புழு வளர்ப்புக்கான மானியம் பெற விவசாயிகள் அணுகலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ணின் மைந்தன் என அழைக்கப்படும் மண் புழுக்கள், பூமியில் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்து வருகின்றன.

மண் புழுக்கள், கழிவுகளை மட்க செய்து உரமாக்கி, பயிர்கள் நன்கு கிரகித்து கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மண்ணில் உள்ள சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை பயிர்களுக்கு எளிதாக கிடைத்து, மண்ணின் வளம் மேம்படுகிறது. 

விவசாயிகள் அனைத்து சூழ்நிலைகளிலும்  வளரும் தன்மையுடைய மண்புழு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.இதில் ‘எப்பஜிக்‘ ரக மண் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் எல்லா சூழ்நிலையிலும் ஏற்புடையதாக உள்ளது. ‘எண்டோஜிக்‘ வகை புழுக்கள், மண்ணின் மேற்பரப்பிலிருந்து 30 செ.மீ., ஆழத்துக்கு கீழ் வளரக்கூடியதாகும். அனிசிக் ரக புழுக்கள் மண்ணின் கீழ்ப்பக்கத்தில் 3 மீ., தூரம் வரை சென்று வசிப்பதால் மண்ணில் துளைகள் ஏற்பட்டு வேருக்கு காற்றும், நீரும் எளிதாக சென்று சேரும். 

நிலப்பரப்பின் மேல் வளர்ந்து குறுகிய கால இடைவெளியில் அதிகளவு மண் புழு உரம் பெற ஆப்பிரிக்கன் மற்றும் ஐரோப்பியன் மண்புழு ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம். மண் புழுவானது நாளன்றுக்கு 12 மி.மீ., வளர்ச்சியும், 4-3 மில்லி கிராம் உடல் வளர்ச்சியும் கொண்டதாகும். புழுக்களின் வாழ்நாள் 2-3 ஆண்டுகளாகும். மண் புழு வளர்ப்பு மற்றும் மானியத்திட்டங்களை தெரிந்து கொள்ள உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News