செய்திகள்
ஆம்னி பஸ்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

Published On 2021-10-20 06:32 GMT   |   Update On 2021-10-20 08:51 GMT
கட்டண உயர்வை கட்டுப்படுத்த ஆம்னி பஸ்களில் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து, அதனை மட்டுமே வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை:

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆயுத பூஜையையொட்டி தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வந்ததால் சென்னையில் வசித்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மற்ற ஊர்காரர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமானார்கள்.

இதையொட்டி கடந்த 13-ந்தேதியில் இருந்து ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ரூ.800 ஆக இருந்த கட்டணம் ரூ.1,600 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. அனைத்து வழித்தடங்களின் பஸ் கட்டணங்களும் இதே போன்று நிர்ணயிக்கப்பட்டு வெளிப்படையாகவே வசூலிக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையை யொட்டியும் அதே போன்று கூடுதல் கட்டணங்கள் இப்போதே நிர்ணயிக்கப்பட்டு இணைய தளங்களிலும் அது வெளிப்படையாக வெளியிடப்பட்டு உள்ளது.

ஆம்னி பஸ்களில் இன்று காலை நிலவரப்படி தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முந்தைய நாளான நவம்பர் 1-ந்தேதி அன்று பெரும்பாலான ஆம்னி பஸ்களில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு ரூ.1,500-க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 2 மற்றும் 3-ந்தேதிகளில் இந்த கட்டணம் இதை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்களிலும் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் இருக்கிறது.

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ஒரு ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணம் ரூ.3 ஆயிரமாக முடிவு செய்யப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த மாத இறுதியில் இந்த கட்டணங்கள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகவே உள்ளது.

ஆனால் அது போன்று கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

பண்டிகை நாட்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆம்னி பஸ்களில் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களும், ஊரில் இருந்து சென்னைக்கு வருபவர்களும் அதிகளவில் இருப்பதால் எவ்வளவு கட்டணம் வைத்தாலும் டிக்கெட் எடுத்து பயணித்து விடுவார்கள் என்கிற எண்ணத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்கள்.

இதுபோன்ற கட்டண உயர்வை கட்டுப்படுத்த ஆம்னி பஸ்களில் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து அதனை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில்தான் அதனையும் மீறி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது.

எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆம்னி பஸ்களின் இணைய தளங்களை ஆய்வு செய்து உடனடியாக கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதற்கிடையே கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் அதனை டிக்கெட்டுக்காக பயணிகளுக்கு அனுப்பும் குறுந்செய்தியில் குறிப்பிடுவது இல்லை. அதில் பயணியின் பெயர், இருக்கை எண் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதை வைத்து எப்படி புகார் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.

எனவே இதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது


Tags:    

Similar News