செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களையும், கைதான சூர்யபிரகாசையும் படத்தில் காணலாம்.

செல்போன்களை திருடி காட்டுப்பகுதியில் புதைத்து விற்பனை செய்த வாலிபர் - சிறுவர்கள் கைது

Published On 2021-09-28 09:13 GMT   |   Update On 2021-09-28 09:13 GMT
சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகப்படும்படி வந்த 4 வாலிபர்களை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் நல்லூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சந்திராபுரம், சரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் கடைகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் புகுந்து செல்போன்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்ததையடுத்து திருப்பூர் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ரவி மேற்பார்வையில் நல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸ்காரர்கள் மணிகண்டன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகப்படும்படி வந்த 4 வாலிபர்களை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான  தகவல்களை தெரிவித்தனர் . 

போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர்கள் நல்லூர் காசியாபாளையத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 19) மற்றும் 17 வயதான 3 சிறுவர்கள் என்பதும், அவர்கள்தான் செல்போன் கடைகளில் நள்ளிரவில் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. 

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசா ரணையில் அவர்கள் திருடிய செல்போன்களை நல்லூர் காட்டுப்பகுதியில் புதைத்து வைத்து பணம் தேவைப்படும் போது அந்த செல்போன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 17 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சூர்யபிரகாஷ் சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் காப்பகத்தில்  ஒப்படைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News