ஆன்மிகம்
மெய்ப்பொருள் நாயனார்

திருநீற்றால் சிறப்புற்ற மெய்ப்பொருள் நாயனார்

Published On 2020-12-08 08:54 GMT   |   Update On 2020-12-08 08:54 GMT
திருவண்ணாமலை அருகில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை ஆட்சி செய்து வந்தவர், மெய்ப்பொருள் நாயனார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
8-12-2020 மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை

திருவண்ணாமலை அருகில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை ஆட்சி செய்து வந்தவர், மெய்ப்பொருள் நாயனார். இவர் சிவநெறியில் பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். சிவபெருமானை தினமும் போற்றி வந்ததோடு, ‘திருநீறு தரித்து, ருத்ராட்சம் அணிந்து சிவவேடத்தில் இருப்பவர்கள் அனைவரும், மெய்ப்பொருள் ஆனவர்கள்’ என்று கருதி வாழ்ந்து வந்தார். இதன் காரணமாகவே அவர் ‘மெய்ப்பொருள் நாயனார்’ என்று அழைக்கப்பட்டார்.

மெய்ப்பொருள் நாயனாருடன், முத்தநாதன் என்ற எதிரி நாட்டு மன்னன் பல முறை போர் தொடுத்தான். அவை அனைத்திலும் முத்தநாதனுக்கு தோல்வியே கிடைத்தது. எப்படியாவது மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்த வேண்டும் என்று நினைத்த முத்தநாதன், அவரது சிவபக்தியையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தான். அதன்படி தன்னுடைய உடல் முழுவதும் திருநீறு தரித்துக் கொண்டான். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டான். அடியார்களுக்கான ஆடையையும் அணிந்து, தன்னை ஒரு சிவனடியாரைப் போல தயார்படுத்தினான்.

கையில் ஓர் ஓலைச்சுவடியை எடுத்துக்கொண்டான். அதனுள் ஒரு கத்தியை மறைத்து வைத்துக்கொண்டான். பின்னர் மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினான். ‘சிவனடியார்கள் வந்தால், அவர்களைத் தடுக்கக் கூடாது’ என்ற உத்தரவு காரணமாக, சிவனடியார் போன்று கபட வேடம் தரித்து வந்த முத்தநாதனை அரண்மனைக் காவலர்கள் உள்பட யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அரண்மனைக்குள் நுழைந்தவன், நேராக மெய்ப்பொருள் நாயனாரின் அந்தபுரத்திற்குள் நுழைந்தான். அங்கு வாசல் காப்பாளனாக நின்ற தத்தன் என்ற சேவகன், முத்தநாதனை தடுத்து நிறுத்தினான்.

ஆனால் அதற்குள் அங்கு வந்த மெய்ப்பொருள் நாயனார், சிவனடியார் வேடத்தில் இருந்த முத்தநாதனை, தனியாக இருந்த பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு பீடத்தில் அமர வைத்தார். பின்னர் சிவனடியாரை வணங்கி, “நீங்கள் வந்த விஷயம் என்ன?” என்று கேட்டார்.

உடனே சிவனடியார் வேடத்தில் இருந்த முத்தநாதன், “மன்னா.. சிவபெருமான் அருளிச்செய்த ஆகமநூல் ஒன்று என்னிடம் உள்ளது. அதை சிவபக்தியில் சிறந்து விளங்கும் உமக்கு எடுத்துக்கூறி, உன்னை இறைவனின் மோட்ச பதவியை அடைவதற்கு வழிகாட்ட வந்தேன்” என்றான்.

அந்த வார்த்தையை உண்மை என்று நம்பிய மெய்பொருள் நாயனார், “அய்யனே.. நீங்கள் ஆகமநூலை வாசித்து எனக்கு அருள்செய்யுங்கள்” என்று கூறி, சிவனடியார் அமர்ந்த பீடத்தின் கீழ் அமர்ந்து சிரம் தாழ்த்தி வணங்கினார். அப்போது ஓலைச்சுவடிக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரது முதுகில் குத்தினான், முத்தநாதன். இந்தச் செயலை, வெளியில் இருந்து மறைவாக கண்காணித்துக் கொண்டிருந்த சேவகவன் தத்தன், நொடிப் பொழுதில் உள்ளே வந்து, தன்னுடைய உடைவாளை உருவி முத்தநாதனை கொல்ல முயன்றான்.

அவனை தன் கரம் கொண்டு தடுத்து நிறுத்தினார், மெய்ப்பொருள் நாயனார். “தத்தா.. இவர் நம்மவர். இவருக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாமல் நம் நாட்டின் எல்லை வரை கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்று கூறினார்.

அதன்படியே அந்தக் கொடியவனான முத்தநாதனை, நாட்டின் எல்லை வரை பத்திரமாக கொண்டு போய் விட்டான் தத்தன். பின்னர் அரண்மனை ஓடிவந்து மெய்ப்பொருள் நாயனாரிடம், “அரசே.. தங்கள் சொற்படியே, நாட்டின் எல்லை வரை கொண்டுபோய் விட்டு வந்துவிட்டேன்” என்றான். அதைக் கேட்ட மெய்ப்பொருள்நாயனார், “இன்று நீ எனக்கு செய்த பேருதவியைப் போல, எனக்கு யாரும் செய்ய முடியாது” என்று கூறினார். அந்த மனமகிழ்வோடு அவரது உயிர் பிரிந்தது. அப்போது சிவபெருமானும், பார்வதியும், இடப வாகனத்தில் தோன்றி அவருக்கு முக்தியை அளித்தனர்.
Tags:    

Similar News