செய்திகள்
ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-11-21 07:17 GMT   |   Update On 2020-11-21 07:17 GMT
அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும், தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் கைக்கு எட்டிய மருத்துவக்கல்வி வாய்க்கு எட்டாதோ என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரை அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.11 ஆயிரம் மட்டும் தான்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இது தடையாக இருக்காது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்தவேண்டிய விடுதிக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்தவேண்டியிருக்கும். ஆனால், அரசு பள்ளிகளில் படித்த ஏழை, கிராமப்புற மாணவர்களால் இந்த அளவு கட்டணத்தை செலுத்துவதற்கு வாய்ப்பே இல்லை.

கல்விக்கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை என்பதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளை தொடங்க முடியாமலோ, தொடர முடியாமலோ போய்விடக்கூடாது. சமூக நீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அவர்கள் மருத்துவப்படிப்பை படிக்க உதவவேண்டும்.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஒரு மாணவனுக்கு சராசரி கட்டணம் ரூ.4 லட்சம் என்ற நிலையில் 86 மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.3.44 கோடி செலவாகும். பல் மருத்துவப்படிப்புக்கு தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 80 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி செலுத்த வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் பயிலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவம் படிக்க ஆண்டுக்கு ரூ.5.44 கோடி செலவழிப்பதில் தவறில்லை.

அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் தடுக்கலாம். அதோடு அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடு செய்து கொள்ளலாம். அதற்கு மாற்றாக அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவேண்டும் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் பெற்றுக்கொள்ளலாம். எனவே அரசு பள்ளிகளில் படித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், “பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறிவிட்டார். விடுதலைக்கு தடையில்லை என சுப்ரீம் கோர்ட்டும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News