செய்திகள்
விசைத்தறி தொழிலாளி ஜெயக்குமார்

கடன் தொல்லையால் வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவிட்டு விசைத்தறி தொழிலாளி தற்கொலை

Published On 2021-09-29 10:03 GMT   |   Update On 2021-09-29 10:03 GMT
குடியாத்தத்தில் மனைவி மற்றும் 2 பிள்ளைகளை தவிக்க விட்டு விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம்:

குடியாத்தம் பிச்சனூர் பலமநேர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவரது மகன் ஜெயக்குமார் (வயது28). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

ஜெயக்குமார் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் பட்டி அவ்வை நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

ஜெயக்குமார் கடன் பிரச்சனையால் மிகவும் கஷ்டத்தில் இருந்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்தார்.

தினந்தோறும் காலை 6 மணிக்கு தறிக்கூடத்திற்கு செல்லும் ஜெயக்குமார் இன்று அதிகாலையே தறிக்கூடத்திற்குச் சென்றார். அவரது செல்போனில் உடன் வேலை செய்யும் தொழிலாளர்களை வாட்ஸ் அப் குழுவுடன் இணைத்தார்.

அந்த வாட்ஸ் அப் குழுவில் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ பதிவிட்டு தறிகூடத்தில் உள்ள ஜன்னலில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை 5 மணி அளவில் வாட்ஸ் அப்பில் பதிவிட்டதை கண்ட சக விசைத்தறி தொழிலாளர்கள் உடனடியாக தறிக்கூடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஜெயக்குமார் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார்.இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி மற்றும் 2 பிள்ளைகளை தவிக்க விட்டு விசைத்தறி தொழிலாளி ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு சரியான கூலி கிடைக்காததால் பெரும்பாலான தொழிலாளர்கள் கடன் வாங்கி குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளதாகவும், செய்த வேலைக்கு கூலியும் உடனடியாக கிடைப்பதில்லை எனவும் அதனால் விசைத்தறி தொழிலாளர்கள் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் விசைத்தறி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 
Tags:    

Similar News