செய்திகள்
திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-18 09:14 GMT   |   Update On 2020-11-18 09:14 GMT
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 14 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி தனியார் துறையில் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உத்தரவாதப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், யுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தீபா, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் முண்டியம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், காணையில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், கண்டமங்கலத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலிங்கம் தலைமையிலும், வசந்தகிருஷ்ணாபுரத்தில் கிளை செயலாளர் அஞ்சுலாட்சம் தலைமையிலும், மழவந்தாங்கலில் கிளை செயலாளர் விஜயரங்கன் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையிலும், சாலை கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பாவாடைராயன் தலைமையிலும், வைரபுரத்தில் கிளை தலைவர் இளங்கோவன் தலைமையிலும், அகூரில் கிளை தலைவர் அங்கமுத்து தலைமையிலும், காட்டுசிவிரியில் கிளை தலைவர் பாக்யராஜ் தலைமையிலும், கெடாரில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், கஞ்சனூரில் மாவட்ட துணை செயலாளர் நடராஜன் தலைமையிலும், அவலூர்பேட்டையில் கிளை செயலாளர் குமார் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News