ஆன்மிகம்
குமரிக்கு கொண்டு வரப்பட்ட சாமி சிலைகளுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு கொடுத்த போது எடுத்த படம்.

திருவனந்தபுரத்தில் இருந்து சாமி சிலைகள் குமரிக்கு வந்தன

Published On 2021-10-19 07:18 GMT   |   Update On 2021-10-19 07:18 GMT
நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு வந்தன. களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் ேதவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கம். அதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து அந்த சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அங்கு கடந்த 6-ந் ேததி முதல் நடந்த நவராத்திரி பூஜையில் சாமி சிலைகள் வைக்கப்பட்டன.

விழா முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் திருவனந்தபுரத்தில் இருந்து குமரிக்கு சாமி சிலைகள் புறப்பட்டன. இந்த சாமி சிலைகள் நேற்று முன்தினம் நெய்யாற்றின்கரையில் தங்கின. நேற்று காலையில் அங்கிருந்து புறப்பட்டு குமரி- கேரள எல்லையான களியக்காவிளைக்கு வந்தன.

அங்கு தமிழக போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சாமி சிலைகளை கேரள அதிகாரிகள், தமிழக அறநிலையத் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், வழிநெடுக பக்தர்கள் சாலை ஓரங்களில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் சாமி சிலைகள் இரவில் குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்கின. இன்று (செவ்வாய்க்கிழமை) குழித்துறையில் இருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் செல்கின்றன.
Tags:    

Similar News