ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-10-06 08:07 GMT   |   Update On 2021-10-06 08:07 GMT
உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பம்சம் கொண்டது ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று(புதன்கிழமை) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவையொட்டி இன்று காலை அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 11 மணிக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு பகவதிஅம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவில் அம்மன் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவையும் நடக்கிறது.

இன்று முதல் 8-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்திலும், 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

12-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்திலும், 13-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும், 14-ந் தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

10-ம் திருவிழாவான 15-ந்தேதி காலையில் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

அதன் பின்னர், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதிஉலா முடிந்த பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லுதல், நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றன.
Tags:    

Similar News