செய்திகள்
டெங்கு கொசு

ஈரோடு மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்

Published On 2021-07-15 10:35 GMT   |   Update On 2021-07-15 10:36 GMT
பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஈரோடு:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடை கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு 300 வீட்டுக்கு, ஒரு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50 வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

ஆய்வின்போது வீட்டில் எங்கேனும் தண்ணீர் தேங்கி உள்ளதா?, கழிவுநீர் தொட்டி, சுற்றுப்புற பகுதி தூய்மையாக உள்ளதா? என்று பார்வையிடுவார். அப்போது கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்தால் அங்கு மருந்து தெளிப்பார்கள். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்று முதல் வீடு வீடாக மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சென்று ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள்.

முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்து தெளிக்கப்படும். மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள்.

Tags:    

Similar News