ஆன்மிகம்
சகோதர சகோதரி தினம்

எம துவிதியை தினம்: இன்று சகோதரி வீட்டில் சாப்பிட்டால் புண்ணியம்

Published On 2021-11-06 08:53 GMT   |   Update On 2021-11-06 08:53 GMT
எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.
இன்று (சனிக்கிழமை) எம துவிதியை தினமாகும். இந்த தினத்தை சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை தினமாக ஆதி காலத்தில் இருந்து கொண்டாடுவதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சூரியனின் குழந்தைகளான எமனும், யமுனையும் அண்ணன், தங்கையாகும்.

இவர்களது அண்ணன், தங்கை பாசம் மிக உயர்வானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யமுனாதேவி ஒரு சமயம் தனது சகோதரன் எமனை தனது வீட்டிற்கு வரவழைத்தாள். எமனும் தனது சகோதரியின் அழைப்பை ஏற்று நிறைய உடைகள், நகைகள் முதலிய சீர்களுடன் யமுனையின் வீட்டிற்குச் சென்றார்.
யமுனையும் தனது கையாலேயே பலவிதமான உணவு வகைகளை தயார் செய்து சாப்பிடச் செய்து சகோதரனை உபசரித்தாள்.

எமனும் பரிசுகளை கொடுத்து சகோதரியை மகிழ்வித்தார். அந்த திருநாள்தான் தீபாவளிக்குப் பிறகு வரும் எம துவிதியை ஒற்றுமையை வளர்க்கும் நன்னாள் என்று மரமாகி உள்ளது.

இந்த நாளில் ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் தனது வீட்டில் சாப்பிடக் கூடாது. தனது உடன்பிறந்த சகோதரியின் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். சகோதரிக்கு நிறைய பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். பெண்ணாகப் பிறந்தவர்கள் தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து விருந்து சாப்பாடு போட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

இதனால் ஒருவருக்கொருவர் அன்பு வளரும். இருவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், உடல் வலிமை, செல்வம் முதலிய நன்மைகள் உண்டாகும். எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.

சகோதரிகளின் வீட்டிற்கு செல்ல முடியாதவர்கள் தனது சகோதரிக்கு சிறிய பணம், பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம். உடன்பிறந்த சகோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா பெண், மாமா பெண், பெரியம்மா பெண், சின்னம்மா பெண் முதலியவர்களை உடன் பிறந்த சகோதரியாக பாவிக்கலாம். எந்த ஒரு உபவாசமோ, பூஜையோ, மந்திரமோ இல்லாத சுலபமாக செய்யப்படும் இந்த எம துவிதியை விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு நன்மையை அடைவோம்.
Tags:    

Similar News