செய்திகள்
கோப்புபடம்

அடுத்தடுத்து 7 மாடுகள் உயிரிழப்பு: கொரோனாவாக இருக்குமோ என விவசாயிகள் அச்சம்

Published On 2021-06-10 10:09 GMT   |   Update On 2021-06-11 02:50 GMT
சென்னை வண்டலூரில் கொரோனா தொற்றால் சிங்கம் இறந்த நிலையில், தற்போது மாடுகளுக்கும் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம் செங்காளிபாளையம் சாணார்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (விவசாயி). இவர் 10-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களில் இவர் வளர்த்து வந்த 7 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இதுகுறித்து முத்துசாமி கூறுகையில், ‘‘கடந்த 3-ந்தேதி ஒரு கறவை மாட்டுக்கு தோளில் சிறு தடிப்பு ஏற்பட்டது. டாக்டரை அழைத்து வந்து சிகிச்சை அளித்தோம். தடிப்பு புண்ணாக மாறியது. வாயில் ஜலம் வடிந்தது. 3 நாட்களுக்குள் நோய் முற்றி கறவை மாடு இறந்துவிட்டது.

நாங்கள் வளர்த்து வந்த பிற பசு, எருமை மாடுகள் மற்றும் கன்றுகளுக்கும் இது பரவியது. மொத்தம் 7 மாடுகள் வாயில் நுரைதள்ளி பலியாகி விட்டன. மேலும் 3 மாடுகள் கவலைக்கிடமாக உள்ளன’’ என்றார்.

விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘சென்னை வண்டலூரில் கொரோனா தாக்கி சிங்கம் இறந்தது. தற்போது மாடுகளுக்கும் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே  கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து எங்கள் அச்சத்தை அரசு போக்க வேண்டும். மர்ம நோயாக இருப்பின் போர்க்கால அடிப்படையில் தடுத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’  என்றனர்.

இதனிடையே கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவையடுத்து கால்நடைத்துறை அதிகாரிகள் குழுவினர்  சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளுக்கு பரிசோதனை செய்தனர். 

இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் பாரிவேந்தன் கூறுகையில், ‘‘செங்காளிபாளையத்தில் கால்நடை மருத்துவக்குழு மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ரத்த மாதிரி, உமிழ்நீர், தீவனம், தீவனபுல், மேய்ச்சல் புல் வகை பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. 

உயிரிழந்த மாடுகளின் உடல்களை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே பாதிப்பு குறித்து முழு விவரமும் தெரியவரும்" என்றார்.
Tags:    

Similar News