லைஃப்ஸ்டைல்
வெல்ல புட்டு

நாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு

Published On 2020-10-22 09:30 GMT   |   Update On 2020-10-22 09:30 GMT
நவராத்திரி ஒன்பது நாட்களுள் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது. அன்று அரிசியினால் செய்யப்படும் வெல்ல புட்டு நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - அரை கப்
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - தேவையான அளவு
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கப் பச்சரிசியை  30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

30 நிமிடம் கழித்து ஒரு துணியில் தண்ணீரை வடித்து உலர விடவும்.

ஈரம் போனவுடன் மிக்சி ஜாரில் போட்டு மாவாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்த மாவை போட்டு மணல் பதத்திற்கு வறுத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை வேக்காடாக குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை மிதமாக சூடு செய்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தூவி அதை கலந்து கொள்ளவும்.

அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை போட்டு அதில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசிறி கொள்ளவும்.

மாவு பிடித்தால் உருவம் வரும் கொஞ்சம் அழுத்தினால் உடைந்து விடும் அது தான் மாவின் பதம்.

ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

மாவு வேக்காட்டில் இருக்கும் பொழுதே மற்றொரு அடுப்பில் கனமான ஒரு பாத்திரத்தை  போட்டு அதில் வெல்லத்தை போட்டு அது முழ்கும் அளவிற்கு சிறிது நீரை ஊற்றவும்.

வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கெட்டி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.

சாதாரண தண்ணீரில் காய்ச்சி பாகினை ஊற்றினால் உருண்டு வரவேண்டும்.

ஏலப்பொடி நெய்யில் வறுத்தெடுத்த தேங்காய் துருவல், முந்திரியை சேர்த்து கிளறி கொள்ளவும்.

வெல்லப்பாகில் ஆவியில் வைத்த புட்டு மாவினை போட்டு கிளறி கொண்டு  அரை வேக்காடு துவரம் பருப்பையும் சேர்க்கவும். இறுதியில் மிஞ்சிய நெய்யை ஊற்றி கலந்தால் புட்டு ரெடி.

புட்டு மாவு கட்டியாக  இருந்தால் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும். நேரம் ஆக ஆக புட்டு உதிரியாகி விடும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News