செய்திகள்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் வழக்கு- சிபிஐ பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2021-05-25 08:31 GMT   |   Update On 2021-05-25 08:31 GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்கப்பட்டு இறந்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ்காரர்கள் 10 பேரும் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்துவிட்டார். மீதமுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.



இந்நிலையில் ஸ்ரீதர், ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீதரின் மனுவும் ரகு கணேஷின் மனுவுடன் இணைத்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News