செய்திகள்
போலியோ சொட்டு மருந்து

சிவகங்கை மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 19-ந் தேதி வழங்கப்படுகிறது

Published On 2020-01-10 11:22 GMT   |   Update On 2020-01-10 11:22 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 19-ந் தேதி வழங்கப்படுகிறது. முகாம்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் ஊட்டச் சத்து மையங்களில் நடை பெற உள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1,33,131 குழந்தைகளுக்கு 19.1.2020 அன்று 1,192 நிரந்தர மையங்களிலும், (அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள்) 61 நடமாடும் மையங்களிலும், 17 பஸ் நிலையங்களிலும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

இதற்கு முன்னேற்பாடாக போலியோ சொட்டு மருந்தின் குளிர்பதன நிலையை பாதுகாக்க தடையில்லா மின்சாரம் வழங்கவும், மருந்து பெட்டிகளை சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்துத்துறை சார்ந்த வாகனங்களை ஒதுக்கி தரவும், சொட்டு மருந்து மையத்திற்கு தேவையான இடவசதி செய்து தரவும் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

முகாம்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் ஊட்டச் சத்து மையங்களில் நடை பெற உள்ளது.

முகாம்களில் பொது சுகாதாரத்துறை, சமூகநலத் துறை, ஊட்டச்சத்துத்துறை, வருவாய்துறை, கல்வித் துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த 5,500 பேர் பணியாற்ற உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுத்திருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முற்றிலும் அகற்ற உதவ வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News