செய்திகள்
கைது

திருப்பூரில் பெண்ணிடம் ரூ.16 ஆயிரம் கள்ளநோட்டு சிக்கியது

Published On 2019-08-27 04:37 GMT   |   Update On 2019-08-27 04:37 GMT
திருப்பூரில் ரூ.16 ஆயிரம் கள்ளநோட்டுடன் சிக்கிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெய்சங்கர் (வயது 50). இவரது கடைக்கு வந்து பொருட்கள் வாங்கிய ஒரு பெண் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார்.

அந்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் அடைந்த ஜெய்சங்கர் அந்த பெண்ணை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொடுத்தது கள்ள நோட்டு என்று உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் அவர் திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்த உமாராணி (42) என்பதும், ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் உமாராணியிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 6, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 8 இருப்பதும் தெரியவந்தது. அந்த நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து உமாராணி கைது செய்யப்பட்டார்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைத்திருந்த கோவையை சேர்ந்த ஒரு வாலிபர் இந்த கள்ளநோட்டை கொடுத்ததாக கூறினார். உமாராணியிடம் கள்ள நோட்டுக்களை கொடுத்தது யார் ? என்கிற விவரங்கள் தெரியவில்லை.

கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டன, அவற்றை திருப்பூருக்கு கொண்டு வந்து புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உமாராணியிடம் கள்ளநோட்டு கொடுத்த கோவை வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News