செய்திகள்
நிவாரண முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு கவர்னர் உணவு வழங்கியபோது எடுத்த படம்

புதிய வகை கொரோனா பரவுவதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்- கவர்னர் தமிழிசை வேண்டுகோள்

Published On 2021-11-30 02:47 GMT   |   Update On 2021-11-30 02:47 GMT
புதிய வகை கொரோனா பரவுவதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருவடிக்குப்பம் மாருதி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமினை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் நேற்று மதியம் பார்வையிட்டார். அப்போது முகாம்களில் இருந்த குழந்தைகளுக்கு பிஸ்கெட்டுகளை வழங்கினார். மேலும் அங்கு இருந்தவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை தெரிவித்துள்ளனர். அவர்களது வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. அவற்றை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

புதுவைக்கு சேத விவரங்களை பார்வையிட வந்த மத்தியக்குழுவிடம் குறைபாடுகளை தெரிவித்துள்ளோம். நமக்கு தேவையான உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். நமது மாநில அதிகாரிகளும் தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு வருகின்றனர்.

அடுத்த மழைக்காலத்துக்கு முன்பாக அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இப்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எனவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சில மாநிலங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்களிடம் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை கேட்கிறார்கள்.

இந்தியாவில் புதிய வைரஸ் பரவியதாக எந்தவித தகவலும் இல்லை. ஆனாலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் நாம் போதுமான அளவுக்கு மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்து வைத்துள்ளோம். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

புதுவையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறைவு என்பது வருத்தமளிக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும். ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் பட்டியல்படி 11 லட்சம் பேர் என்று நாம் கணக்கிடுகிறோம். ஆனால் மத்திய அரசு 13 லட்சம் என்று கணக்கிடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாம் தடுப்பூசியில் 70 சதவீதத்தை எட்டியுள்ளோம்.

எந்தெந்த வீட்டில் யார்யார் தடுப்பூசி போடவில்லை என்று கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. சிலர் மருத்துவ அதிகாரிகளை விரட்டுவதாகவும் கூறுகின்றனர். மருத்துவ அதிகாரிகள் மக்களுக்காகத்தான் வீடுவீடாக வருகின்றனர். புதுப்புது வைரஸ் வரும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் தவறால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Tags:    

Similar News