ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

மதுரையை அரசாளும் மீனாட்சி

Published On 2021-04-29 09:10 GMT   |   Update On 2021-04-29 09:10 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா, மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த தருணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சிறப்புக்குரிய தகவல்களை சிறுசிறு தொகுப்புகளாகப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, விழாவை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தருணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சிறப்புக்குரிய தகவல்களை சிறுசிறு தொகுப்புகளாகப் பார்க்கலாம்.

இந்திரன் அமைத்த விமானம்

மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம், இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்கும் பொருட்டு, பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அதன் ஒரு பகுதியாக சிவபெருமானின் திரு விளையாடல்கள் பலவும் நடைபெற்றதாக அறியப்படும் கடம்பவனமான மதுரைக்கு வந்தான். அங்கு சுயம்பு லிங்கமாக இருந்த ஈசனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றான். தன் தோஷத்தைப் போக்கிய காரணத்தால், இத்தல இறைவனுக்கு விமானத்துடன் கூடிய பெருங்கோவிலை கட்டியதாக தல வரலாறு சொல்கிறது. இந்த விமானத்திற்கு ‘இந்திர விமானம்’ என்று பெயர்.

மரகத மீனாட்சி

இத்தல இறைவியின் பெயர் ‘மீனாட்சி.’ தமிழில் ‘அங்கையற்கண்ணி.’ ‘மீன் போன்ற கண்களை கொண்டவள்’ என்று இதற்கு பொருள். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை, மரகதக் கல்லால் ஆனது. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இதற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர். இத்தல அம்மன், நின்ற கோலத்தில், இடை நெளித்து, கையில் கிளியை ஏந்தியபடி விற்றிருக்கிறாள். இங்கு அன்னைக்கே முதல் மரியாதை. அவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகுதான், மூலவரான சுந்தரேஸ்வரருக்கு வழிபாடுகள் நடைபெறும்.

பொற்றாமரைக் குளம்

நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுதல்படி, சிவபெருமான் தன்னுடைய சூலாயுதம் கொண்டு உருவாக்கியதே, இந்தக் குளம். இதற்கு ‘சிவகங்கை’ என்று பெயர். இந்திரன், இத்தல இறைவனை வழிபட்டுதான், தோஷம் நீங்கப் பெற்றான். அப்படி வழிபாடு செய்வதற்காக இந்த குளத்தில் இருந்து பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற காரணத்தால், இது ‘பொற்றாமரைக் குளம்’ என்றானது. திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய இடம் இது. ஒரு நாரைக்கு, சிவபெருமான் அருளிய வரத்தின்படி, இந்தக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இன்றளவும் இல்லாமல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான்.

165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்ட இந்தக் குளத்தைச் சுற்றிலும், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குளத்தில் அமாவாசை, கிரகண நாட்கள், மாதப் பிறப்பு மற்றும் புண்ணிய நாட்களில் நீராடி, இறைவனையும், இறைவியையும் தரிசித்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

வெளி ஆவரணம்.. உள் ஆவரணம்

மதுரை திருத்தலத்திற்கு வெளியே நான்கு திசைகளிலும் உள்ள ஆலயங்கள், ‘வெளி ஆவரணம்’ என்றும், மதுரை மீனாட்சி கோவிலுக்கு வெளியே நான்கு திசைகளிலும் அமைந்த ஆலயங்கள் ‘உள் ஆவரணம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. அதன்படி வெளி ஆவரணங்களாக மதுரைக்கு தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம்’ ஆகிய தலங்கள் உள்ளன. உள் ஆவரணங்களாக மதுரை கோவிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட ‘பழைய சொக்கநாதர் கோவில்’, மேற்கு திசையில் சிவபெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த ‘இம்மையில் நன்மை தருவார் கோவில்’, கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ‘ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோவில்’, தெற்கு திசையில் எமன் வழிபட்ட ‘தென்திருவாலவாய் கோவில்’ ஆகியவை உள்ளன.
Tags:    

Similar News