செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

மருத்துவ தேவைக்கு மட்டுமே நீலகிரிக்கு வர அனுமதி- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

Published On 2021-06-04 09:38 GMT   |   Update On 2021-06-04 09:38 GMT
பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ-பதிவு மூலம் வருகிறவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என்று உண்மை தன்மை அறிந்து அனுமதிக்கப்படுகிறது.
ஊட்டி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஊட்டி ஸ்டேட் வங்கி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி சோலை மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி குருசாமி தபேலா, உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறை, வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாவட்டம் தோறும் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் 1,000 மரக்கன்றுகள் இன்று (அதாவது) நேற்று நடவு செய்யப்பட்டது. சுற்றிலும் வேலி உள்ள பகுதிகளில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வளர்ந்த பின் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். பிற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் மருத்துவ தேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ-பதிவு மூலம் வருகிறவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என்று உண்மை தன்மை அறிந்து அனுமதிக்கப்படுகிறது. நீலகிரியில் 11 கொரோனா சிகிச்சை மையங்கள், 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News