செய்திகள்
புத்தக பைகள் கொண்டு வந்த கன்டெய்னர் லாரி

புத்தக பைகள் கொண்டு வந்த கன்டெய்னர் லாரியை தி.மு.க.வினர் மறித்ததால் பரபரப்பு

Published On 2021-03-05 03:02 GMT   |   Update On 2021-03-05 03:02 GMT
தஞ்சையில் புத்தக பைகள் கொண்டு வந்த கன்டெய்னர் லாரியை உரிய ஆவணங்கள் இருந்ததால் பழைய கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஒரு கன்டெய்னர் லாரி வந்து நின்றது. வெகுநேரமாக நின்று கொண்டு இருந்ததால் இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பறக்கும்படை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜஸ்தானை சேர்ந்த அந்த கன்டெய்னர் லாரி அரியானா மாநிலத்தில் இருந்து வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் லாரியில் இருந்த ஆவணங்களை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 4 ஆயிரத்து 202 இலவச புத்தகப்பைகள் இருப்பது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இருந்ததால் அந்த லாரியை பழைய கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் அனைத்து பைகளையும் பிரித்து பார்த்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்றும், உள்ளே பணம் இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என்றும் கூறினர்.

இதையடுத்து, லாரியில் இருந்த புத்தகப்பைகள் இறக்கப்பட்டு தி.மு.க.வினர் முன்னிலையில் பிரித்து பார்க்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்த அறையில் புத்தகப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News