செய்திகள்
விவசாய சங்க பிரதிநிதிகள்

3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்

Published On 2021-01-22 13:14 GMT   |   Update On 2021-01-22 13:31 GMT
மத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 59-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று 11-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக வரை வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தாமல் காலதாமதம் செய்வதாகவும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் மத்திய அரசின் இந்த கோரிக்கையை பரீசிலிக்கும்படி மத்திய மந்திரிகள் எங்களிடம் கூறினர்.

நாங்கள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி எங்களது கோரிக்கையை பரீசிலனை செய்யும்படி அரசிடம் கோரிக்கை விடுத்தோம். அதன்பின் மந்திரிகள் சென்றுவிட்டனர்.

உணவு இடைவேளைக்கு பின் மந்திரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள் காத்திருந்தனர். மந்திரிகள் எங்களை 3 1/2 மணிநேரம் காக்கவைத்த பின்னர் வந்தனர்.

இது விவசாயிகளை அவமதிக்கும் செயல். 3 1/2 மணிநேரம் கழித்த மந்திரி அரசின் கோரிக்கையை பரீசிலனை செய்யும்படியும், பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி குறித்து அரசு அறிவிக்கவில்லை

எங்கள் போராட்டம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெறும். திட்டமிட்டபடி, ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும்.

என்றனர்.
Tags:    

Similar News