செய்திகள்

கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: ஒரு மாதம் ஆகியும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Published On 2017-10-06 03:58 GMT   |   Update On 2017-10-06 03:58 GMT
பெங்களூருவில், கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
பெங்களூரு:

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க உளவுப்பிரிவு போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கவுரி லங்கேசை சுட்டுக் கொன்ற ஒரு மர்மநபரின் உருவம் மட்டும், அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த காட்சிகள் தெளிவாக இல்லாத காரணத்தால் கொலையாளிகளை பிடிக்க போலீசாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. என்றாலும், கவுரி லங்கேசை கொன்ற மர்மநபர்களை கண்டுபிடிக்க பசவனகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி நகர் பகுதி வரை உள்ள 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக லட்சக்கணக்கான செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதே நேரத்தில் கவுரி லங்கேசை நக்சலைட்டுகள் தீர்த்து கட்டினார்களா?, அவரது பத்திரிகையில் சிலருக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களிலும் சிறப்பு விசாரணை குழுவினர் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ஆனால் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும், கொலையாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மேலும் கவுரி லங்கேஷ் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது கூட தெரியவில்லை. கொலையாளிகள் பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே எழுத்தாளர் கலபுரகி சுட்டுக் கொல்லப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:    

Similar News