உள்ளூர் செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட நெல்லை புதிய பஸ் நிலையத்தின் அழகிய தோற்றம்

நெல்லை, மதுரை, தஞ்சையில் நவீனமாக மாறிய பஸ் நிலையங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2021-12-08 08:28 GMT   |   Update On 2021-12-08 08:28 GMT
திருநெல்வேலி மாநகராட்சியில் 13 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சியில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள புராதான அங்காடிகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சியில் 18 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட உய்ய கொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூர் மாநகராட்சியில் 15 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தில் 14 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில், 13 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 11 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தம், 14 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்த நடைமேடைகள், 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலைய கூடுதல் கட்ஷீடம்; 4 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா, 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்காவிற்கான கூடுதல் வசதிகளை திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 13 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேலப்பாளையத்தில் 12 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 பசுமை வளாகப் பூங்காக்களையும் திறந்து வைத்தார்.

வேலூர் மாநகராட்சியில் 13 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2.40 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சத்துவாச்சாரி வணிக வளாக மையம், விருப்பாச்சிபுரம், கன்னிகாபுரம் பகுதியில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டிடம் மற்றும் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடத்தை திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் நெமிலி பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 241 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் மற்றும் மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படை தளம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பேரூராட்சி ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்கிடவும், பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக் குடி யிருப்புகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மொத்தம் 533 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முடிவுற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முன்களப் பணியாளர்கள் களப்பணியாளர் ஜி.கணேசன் மற்றும் மின்னியலாளர் எம். பாலாஜி ஆகியோரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா 25 லட்சம் ருபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News